பசில் ராஜபக்ச வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Report Print Kamel Kamel in அரசியல்
20Shares

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக மூன்று மாத காலம் அமெரிக்கா செல்ல பசில் ராஜபக்சவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நேற்று கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பசில் வெளிநாடு செல்ல அனுமதியளித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள அமெரிக்க அனுமதிக்குமாறு பசில் ராஜபக்ச நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஊடாக கோரியிருந்தார்.

பசில் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கு விசாரணையின் போதே இவ்வாறு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வந்த பசில் ராஜபக்சவிற்கு, அமெரிக்க செல்ல அனுமதிக்கக் கூடாது என எதிர்த்தரப்பு சட்டத்தரணி கோரியிருந்தார்.

எனினும், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் தன்னார்வ அடிப்படையில் நாட்டுக்கு வந்து வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியதாகவும், பிணை நிபந்தனைகள் எதனையும் மீறியதில்லை என்பதாலும் வெளிநாடு செல்ல அனுமதிப்பதாக நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தெரிவித்துள்ளார்.

25 லட்சம் ரூபா மேலதிக சரீரப் பிணை அடிப்படையில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயணம் செய்யும் காலம், மீள நாடு திரும்பும் தினம், பயணம் செய்யும் விமானத்தின் இலக்கம், விமான டிக்கட்டின் பிரதி போன்றன குறித்த விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்சவிற்கு நிதி மோசடி அரச சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments