பொருத்து வீடுகள் மக்கள் வாழ பொருத்தமல்ல

Report Print Karan in அரசியல்
100Shares

பொருத்து வீடுகள் வட மாகாண மக்களை சினங் கொள்ள செய்யும் ஒரு அரச செயல் திட்டம். கடந்த 30 வருட கால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

தமது உயிர், சொத்து மற்றும் உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதற்காகவே சமகால அரசாங்கத்தினால் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த அமைச்சு உண்மையில் தமிழ் மக்களுக்கு உதவி செய்கிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது. வடக்கில் மக்கள் வாழ முடியாத பொருத்து வீடுகள் செயல் திட்டத்தை யார் வலுக் கட்டாயமாக முன்னெடுக்கிறார்?

பொருத்து வீடுகள் வடபுல மக்களுக்கு உகந்தது அல்ல. அத்தகைய வீடுகள் மிகவும் கூடுதலான உஷ்ணத்தைக் கொடுக்க வல்லன.

இதனை பல தடவைகள் கூறியும் அமைச்சர் சுவாமிநாதன் காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிவதில்லை. தமது காற்சட்டை பை நிறைந்தால் போதுமானது என்று நினைக்கிறார் போலும்.

மக்களுக்கு பொருத்தமில்லாத வீடுகளை கட்டிக் கொடுப்பதால் அமைச்சருக்கு பெரிய தரகுப் பணம் கிடைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதனால் அமைச்சரின் செயற்பாட்டிலும் பலருக்கு சந்தேகம் உண்டு.

பாராளுமன்றத்தில் கடந்த 06-12-2016 அன்று இந்த அமைச்சிற்கான குழு நிலை விவாதத்தின் போது பாரிய கருத்து மோதல் ஏற்பட்டது.

அமைச்சர் சுவாமிநாதனின் ஊழல் நிறைந்த செயல்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்தது.

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கோரியுள்ளார்.

பொருத்து வீடுகள் சாதாரணமாக சில தயார் நிலையில் சட்டங்கள் மற்றும் கட்டமைப்புக்களுடன் மிகவும் குறுகிய காலத்தில் கட்டப்படக் கூடிய வீடாகும்.

இந்த பொருத்து வீடுகளில் உலோகப் பயன்பாடு அதிகம். மேலும் இயற்கையாக வெப்பம் கூடிய வட மாகாணத்தில் இத்தகைய வீடுகளால் மக்கள் மிக கூடுதலான வெப்பத்தை உணர்வர்.

இது மக்களின் ஆரோக்கிய நிலையைப் பெரிதும் பாதிக்கும். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்கவும் அமைச்சர் சுவாமிநாதனின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடினார்.

இறுதியாக வடக்கில் நிர்மாணிக்கப்படும் 65000 வீடுகளில் 80 வீதமானவை செங்கல் கொண்டு கட்டப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அப்படியாயின் இதுவரை காலமும் கட்டப்பட்ட பொருத்து வீடுகளின் நிலைமை என்ன? அந்தச் செலவுகள் யாருடைய கணக்கில் வைப்பது? மீண்டும் பொது மக்களின் வரிப் பணம் வீண் விரயம் செய்யப்படுகிறதா?

மேலதிக தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையின் போது எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுவாமிநாதனுடன் எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஏற்கெனவே மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனை நியமித்து ஏற்பட்ட பிரச்சினையை அவர் நன்கு அறிவார்.

எனவே அவ்வாறான ஒரு நிலை ஏற்பட அவர் அனுமதிக்கமாட்டார். சுவாமிநாதனின் செயலால் பிரதமருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கெனவே அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சின் நிர்வாகத்தில் அதிகார துஷ்ப்பிரயோகத்தைச் செய்ததினால் அந்த அமைச்சின் செயலாளர் விலகிச் சென்று தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளராக கடமையாற்றுகின்றார்.

அமைச்சர் சுவாமிநானின் வேலைகள் தமது நிர்வாக கட்டுப்பாடுகளை மீறுவதாக இருப்பதால்தான் அந்த அமைச்சில் இருந்து விலகிச் செல்வதாக முன்னாள் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதிய செயலாளர் ஒருவர் இன்னும் அந்த அமைச்சிற்கு நியமிக்கப்படவில்லை. மேலதிக செயலாளார் ஒருவரே பதில் செயலாளராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments