தமிழ் மொழியில் மன்னிப்பு என்பது மிகவும் உன்னதமான சொல். அதற்குக் காரணம் மன்னிப்பு என்பது சொல்பவரையும் கேட்பவரையும் இணைக்கும் வல்லமை கொண்டது.
அதேவேளை இச்சொல் சொல்பவராலும் கேட்பவராலும் ஏற்கப்படும் போது பெறுமதி பெறுவதாக இருக்கின்றது.
ஆகையால்தான் மன்னிப்பு என்ற சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படாமல் முக்கியமான சந்தர்ப் பங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் மன்னிப்பை ஏற்றுக் கொள்வது எந்தளவு தூரம் பெருந்தன்மையானதோ அதற்கு ஈடாக மன்னிப்புக் கேட்பதும் பெருந்தன்மை என்று கருதும் வழக்காறு தமிழ்ப்பண்பாட்டில் உள்ளது.
இருந்தும் மன்னிப்பு என்ற உயர்ந்த வார்த்தை வெளிவந்த கணப்பொழுதே அதனைப் பிரயோகித்தவர் இன்னொரு தவறை இழைக்கக்கூடாது என்பதும் கவனத்துக்குரியது.
இவை மன்னிப்புப் பற்றிய சில குறிப்புகள் மட்டுமே.ஆ! அப்படியா? மன்னிப்புக்கு இப்படியொரு உயர்வு உள்ளதா? நடைமுறையில் அதனைப் பார்க்கலாமா? என்றெல்லாம் கேட்டால் நமது பதில் மெளனமாகவே இருக்கும்.
அந்தளவுக்கு இப்போது மன்னிப்பு என்பது மலிந்த - நலிந்த - மதிப்பற்ற சொல்லாகிப் போயிற்று.
இது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய நூலக எரிப்புக்காக மன்னிப்புக் கேட்கும் பொறுப்பைக் கொண்டவரா? எனில் ஆம் என்பதே பதிலாகும்.
1981ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே நடந்தது.
எனவே அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி யில் நடந்த மிகப்பெரியதொரு அழிவுச் செயலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்கும் பொறுப்பாண்மைக்குரியவர் என்பது ஏற்புடையது.
ஆனால் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்பது உள்ளார்ந்தமானதாக இருந்தால், இனி மேல் இந்த நாட்டில் இந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் இடம் பெறக்கூடாது.
அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து கேட்ட மன்னிப்பு அர்த்தமற்றது என்பதுடன் தற்போதைய ஆட்சியினர் இப்போது இழைக்கின்ற தவறுகளுக்காக இன்னும் 35 வருடங்களின் பின்னர் இன்னொரு பிரதமர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்.
ஆகையால் தமிழ் மக்களுக்கு எந்தவித இடுக் கண்ணும் ஏற்படாதவாறு நல்லாட்சியினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இருந்தும் தமிழர் பகுதிகளில் இரவோடு இரவாக புத்தர் சிலையை அமைக்கும் பணி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.
சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பிரதேசங்களில் நிறுவுவதில் படைத் தரப்பு முனைப்புக் காட்டி நிற்கின்றது.
இப்படியான அநியாயங்கள் நடப்பதை முற்றாக நிறுத்தி; தமிழ் மக்களின் உரிமைகளை உரியவாறு வழங்கி இன்றைய அரசு தன்னை நல்லாட்சியாக நிரூபிக்கும் போது, யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பு மட்டுமன்றி இன்னும் பல அழிவுச் செயல்களுக்கான மன்னிப்பாக இவை அமையும் என்பது நம் தாழ்மையான கருத்து.
தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவது என்பது வெறும் வார்த்தைகளால் அமைதல் அன்றி செயலால் ஆக வேண்டும்.
அதுவே உண்மையான மன்னிப்பு கோரலாகும்.
- Valampuri