பெறப்படும் சிறிய உதவிகள் மூலம் நாம் உயர்ந்திட வேண்டும் - கி.துரைராசசிங்கம்

Report Print Navoj in அரசியல்
31Shares

பெறப்படும் உதவிகள் சிறிதாயினும் அவற்றைப் பயன்படுத்தி எமது முயற்சிகளின் ஊடாக நாம் உயர்ந்திட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தர்.

திருகோணமலை சம்பூர் பிரதேச பண்ணையாளர்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்வில் நேற்று(07) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து,

இந்த உலகில் மிகப் பெரிய பணம் படைத்தவர்களின் வரலாறுகளைப் பார்த்தால் சிறிய முதலீடுகளுடன் அவர்களது பயணத்தைத் தொடங்கியவர்களாகவே இருக்கின்றார்கள் எனவே, உதவிகள் சிறிதாயினும் எமது முயற்சிகளின் ஊடாக நாம் உயர்ந்திட வேண்டும் என குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் நோக்கிய பல முக்கிய சவால்களில் சம்பூர் மீட்பு என்பது ஒன்றாகும்.

கடந்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக இதனை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எமது கட்சியும் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் மிக அக்கறையோடு பல விடயங்களை மேற்கொண்டார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்கின்ற அன்றைய நாளில் தான் சம்பூர் தொடர்பாக வழக்கின் தீர்ப்பு வந்தது ஒரு விசேடம்.

எமது மக்களின் பல கஷ்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் பின்னர் இந்த மண் எமது மக்களுக்கு கிடைத்துள்ளது. இதில் எமது கட்சியின் செயற்பாடுகளும் இருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.

இதனைத் தொடர்ந்து எமது மீன்பிடித் திணைக்களத்தினால் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடிப்பதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பண்ணையாளர்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வில் நடத்துகின்றோம். இவற்றை மக்கள் வாழ்வாதாரமாகப் பயன்படுத்த வேண்டும்.

நாம் ஏழைகள், எமக்கு வறுமை என்றெல்லாம் சொல்வது சோம்பேறிகளின் கதை. அது எமது மக்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் எமது மக்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கியவர்கள். சோம்பலைத் துறந்து பல செயற்பாடுகளை மேற்கொண்ட பாரம்பரியங்களைக் கொண்டவர்கள்.

எனவே நாம் யாரும் ஏழைகள் என்றோ வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றோம் என்று சொல்வதைத் தவிர்த்து அதற்கு மேல் வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

நம்பிக்கையோடு இருங்கள் எம்மால் ஆன எல்லா உதவிகளையும் எமது மக்களுக்காக நாம் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் சிறிய அளவிலான பண்ணைகளை ஊக்குவித்தல் செயற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன், கால்நடை உற்பத்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பௌசி, பிரதேச கால் நடை வைத்திய அதிகாரி, திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பண்ணையாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments