அபகீர்த்தி ஏற்படுத்துவோர் தேசத் துரோகிகளே!

Report Print Samy in அரசியல்
95Shares

ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலின் போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டு மக்களுக்கு அளித்த மிக பிரதானமான உறுதிமொழி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதும், தற்போதுள்ள அரசியலமைப்பை முற்றாக ஒதுக்கி புதியதொரு அரசியலமைப்பைத் தயாரிப்பதும் என்பதாகவே காணப்பட்டது.

புதிதாக தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது. சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலேயே தயாரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததும் அரசியலமைப்பை உருவாக்கும் பொருட்டு முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்றி அதற்கான அடித்தளத்தை இட்டது.

அதனடிப்படையில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரந்துபட்ட ஆதரவைக்கொண்ட ஒரு அரசியல் சாசனத்தை தயாரிக்க முடியுமானால் அது பெரும் சாதனையாகவே கொள்ள முடியும் என்று அதனை தயாரிக்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கூறுகிறார்.

இந்தவிடயத்தில் சகல தரப்புகளையும் ஒரே புள்ளியின் கீழ் கொண்டு வருவது சாத்தியப்படுமா என்பதே தன் முன்னுள்ள பெரும் சவாலாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசியல் சாசனத்தை தயாரித்து முடிப்பது தொடர்பில் காலஎல்லை விதித்துச் செயற்பட முடியாது என கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ள போதும், அரசு தரப்பு அதனை விரைவுபடுத்துவதில் அதன் வேகத்தை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

ஆனாலும் நாம் எதிர்பார்ப்பது போன்று புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் விடயத்தில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் சில சக்திகள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டு வருவதை நன்கு அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது.

தற்போதைய அரசியல் சாசனத்தில் ஒரு புள்ளியைக்கூட மாற்றுவதாக இருந்தாலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றிருப்பதால் முதலில் அதற்குரிய விதத்தில் தயாரிப்புப் பணிகளை முன் நகர்த்த வேண்டியுள்ளது.

எதை மாற்றுவது எதை விடுவது எதனைச் சேர்ப்பது என்ற விடயங்கள் உட்பட ஏராளமான விவகாரங்களை கையாள வேண்டியுள்ளதால் சாசனத்தை தயாரிப்பதில் கணிசமான காலத்தை எடுக்க வேண்டியுள்ளதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை ஜனாதிபதியும். அரசும் கொண்டிருக்கும் நிலையில் சிலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஏதொவொரு வடிவில் உள்வாங்கப்பட வேண்டுமென்று கூறி வருவதையும் அவதானிக்க முடிகிறது.

ஆனால் ஜனநாயக அரசியலில் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கும் வகையிலேயே அரசியல் சாசனம் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் உறுப்புகளுடன் எல்லோரும் உடன்படவில்லை என்பது நிதர்சனமான விடயமாகும்.

நிறைவேற்று அதிகார முறை கொண்டு வரப்பட்ட நாள் முதல் இன்று வரையில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை எட்ட முடியாத நிலையே தொடர்கிறது.

பதிலாக புதுப்புதுப் பிரச்சினைகளும் முளைத்துக்கொண்டே காலம் சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே சிறுபான்மைச் சமூகங்களுக்கும் நம்பிக்கை தரக்கூடியதான அரசியல் சாசனத்தை தயாரிப்பதில் அரசு அக்கறை காட்டி வருகின்றது.

பெரும்பான்மையினரில் குறிப்பிடக்கூடிய இனவாத சக்திகள் சிறுபான்மை சமூகத்துக்கும் உரிமை வழங்கக் கூடியதான யாப்பு உருவாவதை விரும்பவில்லை.

19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

எல்லையற்ற அதிகாரங்கள் தனிநபரிடம் இருப்பது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் என்பது வெளிப்படையான விடயமாகும்.

நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடிய அத்த அதிகாரத்தை முற்றாகவே துடைத்தெறிய வேண்டுமென்பதில் நல்லாட்சி அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் அரசியலமைப்பு முழுமையாக மாற்றம் பெறுவதை சில சக்திகள் அடியோடு விரும்பவில்லை என்பதை அண்மித்த காலமாக நன்கு அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொது எதிரணி தரப்பினரில் பலர் இது குறித்து பல தடவைகள் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர்.

மக்கள் சார்பு அரசியலமைப்பொன்று வருமானால் தங்களது அரசியல் எதிர்காலம் அஸ்தமித்து விடும் என்பதால் புதிய யாப்பு உருவாவதை தடுப்பதற்கான கைங்கரியங்களில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

இத்தகையதொரு சூழ்நிலையில் அரசியல் சாசனத் தயாரிப்புப் பணிகளில் முக்கிய பங்கெடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவுக்கு அநாமதேய தொலைபேசி அச்சுறுத்தல் அதுவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அவர் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றார்.

இதுவொரு கோழைத்தனம் மிக்க அநாகரிகச் செயற்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் அவர் கொண்டிருக்கும் வகிபாகத்தை அடிப்படையாகக் கொண்டே தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி தூஷித்திருக்கிறார்.

ஒழுக்கப் பண்புகளை மீறி காடைத்தனமான முறையில் நடந்து கொள்ளும் இத்தகைய அரசியல் நாகரிகமற்ற பிரதிநிதிகள் விடயத்தில் உடனடியாக உரிய கவனமெடுத்து சட்டத்தின் பிடிக்குள் இத்தகையவர்களைச் வைக்க வேண்டும்.

அரசியல் சாசனம் என்பது ஒரு நாட்டின் மிக முக்கியமான ஆவணமாகும். ஏன் இதனை நாட்டின் போது வேத நூலாகக்கூட கருதலாம்.

அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவோரை தேசத்துரோகிகளாகவே நோக்க வேண்டியுள்ளது.

இது போன்ற கோழைத்தனங்களுக்கு அஞ்சாமல், சளைக்காமல் சோர்வடையாமல் எம்மீது சுமத்தப்பட்டிருக்கும் கடமையை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டியது இதில் தொடர்புபட்ட சகலரதும் கடப்பாடாகும்.

அதேசமயம் இதன் பின்னணியில் காணப்படக்கூடிய தீய சக்தி எவை என்பதை கண்டறிவதும் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனநாயகத்தின் பேரால் வலியுறுத்துகின்றோம்.

Comments