ரஞ்சனிடம் 50 கோடி ரூபா நட்டஈடு கோரும் உதய கம்மன்பில

Report Print Kamel Kamel in அரசியல்
61Shares

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் 50 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் அண்மையில் முகநூலில் இட்ட பதிவு ஒன்று தம்மை நேரடியாக அவதூறு செய்வதாக அமைந்துள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறும கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் ஒரு நாள் கூட நான் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கவில்லை. 13 நாட்கள் நாள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட காலத்தில் நான் சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்ததாக ரஞ்சன் ராமநாயக்க கூறி முகநூலில் இட்டுள்ள பதிவு முற்றிலும் பொய்யானது.

போலிக் குற்றச்சாட்டு சுமத்தி இணையத்தில் பிரச்சாரம் செய்தமைக்காக 50 கோடி ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Comments