சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு!

Report Print Kamel Kamel in அரசியல்
80Shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

செயற்குழுவின் உறுப்பினர்கள் பிரதமரிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தை விமர்சனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்கள், சலுகைகளை அனுபவித்து வரும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அதற்காக குரல் கொடுக்கும் போதிலும் சுதந்திரக் கட்சியின் அனேக அமைச்சர்கள் மௌனம் காத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அநேகமான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் போது சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எதுவும் பதில் கூறுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments