ஹம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற வாய்ப்புண்டு

Report Print Gokulan Gokulan in அரசியல்
101Shares

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, தினமும் மக்களுக்கு புது அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கருத்தை வலியுறுத்தி தெரிவித்தார்.

நாட்டின் காணி உரிமை, ஆட்புல இறைமைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத விதத்திலேயே வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடமளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கருத்து ஏன் திடீரென தெரிவிக்கப்பட்டது என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஹம்பாந்தோட்டையில் ஒரு பாரிய நிலம் வெளிநாட்டு கம்பனி ஒன்றுக்கு முழுமையாக வழங்கப்படும் என்றும் அதில் கைத்தொழில் வலயம் ஒன்று அமைக்கப்படும் என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இது ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில முதலீட்டு சபைக்குரிய வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஆனால் அது மக்கள் மத்தியில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அரசாங்கம் வெளிநாட்டிற்கு அரச காணிகளை விற்க போகிறது என்ற செய்தி அனலாய் பரவத்தொடங்கியது.

இதனை கேள்வியுற்ற ஜனாதிபதி, உடனடியாக இந்த உடன்படிக்கை கைச்சாத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரு விடயம் இடம்பெறாது என்றும் அரசாங்கம் ஒருபோதும் அரச காணிகளை வெளிநாடுகளுக்கு விற்காது என்றும் பின்னர் கூறப்பட்டது.

ஆனால் இன்று ஹம்பாந்தோட்டையில் ஒரு நிகழ்வு நடக்க இருக்கின்றமை உண்மை.

இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றாலும், நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலைமையை சமாளிப்பதற்கு ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவை அழைத்து கொண்டு பிரதமர் ஹம்பாந்தோட்டை செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை எந்தளவு மோசமடைந்துள்ளது என்பதை நன்கு உணர்த்துகிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது போன்று பிரதமர் செயல்படுகிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மற்றுமொரு எதேச்சையான செயற்பாடு என்று ஊடக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்பாடுகள் எல்லாம் சமகால அரசாங்கத்திற்கு மேலும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இத்தகைய செயற்பாடுகளையும், பொறுப்பற்ற கூற்றுக்களையும் ஊடகங்களுக்கு தெரிவித்து விட்டு, அதன் பின்னர் ஊடகங்களே அரசை கவிழ்க்க முற்படுகின்றன என்று குறை கூறுவது மூடத்தனம் என்றே கூறவேண்டி இருக்கிறது.

ஊடகங்களை குறை கூற முன்னர், குறை கூறுபவர்கள் தாம் செய்வது சரியானதா? என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்பற்ற கூற்றுக்கள் மற்றும் முரண்பாடான கருத்துக்களை அரசாங்கத்தில் பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் தெரிவிப்பதனாலேயே ஊடகங்கள் அவற்றை குறைகளாக சுட்டிக்காட்டுகின்றன.

Comments