சமஷ்டியே இறுதித் தீர்வு! நியாயமற்ற தீர்வொன்றை ஏற்கமாட்டோம்! சம்பந்தன் திட்டவட்டம்

Report Print Samy in அரசியல்
304Shares

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முற்போக்கான விடயங்களுக்கு நாம் ஆதரவுகளை வழங்குகின்றோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். ஒற்றை ஆட்சிக்குள் ஒருபோதும் இறுதி தீர்வை வழங்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டியே இறுதித் தீர்வாகும் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மாலை 4.30முதல் இரவு 8 மணிவரையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், அவ்வமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.ராகவன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், அக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினரான சர்வேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரட்ணம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தந்தையாரின் மறைவையடுத்து நடைபெறவுள்ள கிரியைகளில் பங்கேற்கவிருப்பதால் அவ்வமைப்பின் சார்பில் சட்டத்தரணி ஸ்ரீீகாந்தா, ஹென்றி மகேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மகாணசபை உறுப்பினர் கேவிந்தன் கருணாகரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் கூட்டம் மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது. அதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தார். அதற்கு அமைவாகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் கூட்டம் கூட்டப்படவேண்டும் எனக் குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தில் சில விடயங்களை கூறியிருந்தார். அவை தொடர்பாக கலந்துரையாடுவோம். கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம் என்றார். அதனையடுத்து இடம்பெற்ற கருத்து பகிர்வுகளும் வாதப்பிரதிவாதங்களும் வருமாறு,

சிவசக்தி ஆனந்தன் எம்.பி

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான சுயநிர்ணய ஆட்சியை உருவாக்கி தமிழ் மக்களின் அபிலாஷைகள் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்போம் என 2013ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும், 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் விஞ்ஞாபனங்களை மக்களிடத்தில் வழங்கி அதற்கே ஆணை பெற்றுள்ளோம்.

அவ்வாறிருக்கையில் தற்போது புதிய அரசியலமைப்புக்கான பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களும் விமர்சனங்களும் காணப்படுகின்றன.

குறிப்பாக ஒற்றையாட்சிக்குள் தீர்வை எட்டப்போகின்றோம். வடக்கு கிழக்கு இணைப்பில்லை என்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றது. ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் நாம் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை மீற முடியாது.

சிங்கள தலைமைகள் ஒரு நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. சமஷ்டியை ஏற்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு போன்ற விடயங்களை விட்டுக்கொடுக்காது இருக்கின்றன. அவ்வாறிருக்கையில் நாம் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து மாறியுள்ளோம் எனில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலில் மாறியிருக்கும் எமது நிலைப்பாட்டை வௌியிட்டு மீண்டும் மக்களிடத்தில் ஆணை கோரவேண்டும். அதற்கு அவர்கள் அங்கீகாரமளிப்பார்களாயின் நாம் அதன் பிரகாரம் செல்ல முடியும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

சிவசக்தி ஆனந்தன் கூறும் விடயத்துடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடக்கு கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை எனக் கூறுகின்றார்.

ஒற்றையாட்சியை கைவிட முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் வௌிப்படையாகவே கூறுகின்றனர். அதேநேரம் பௌத்த மதகுருமாரும் ஒற்றையாட்சியை கைவிட முடியாதென வலியுறுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்கள் எவ்வாறு பெரும்பான்மை மக்களை வழி நடத்தினார்களோ அவ்வாறே தற்போதும் வழி நடத்துகின்றார்கள். மகிந்த ராஜபக்ச எவ்வாறு ஒற்றை ஆட்சி, வடக்கு கிழக்கு விடயங்களில் இறுக்கமாக இருந்தாரோ அதேபோன்று தான் தற்போதையவர்களும் இருக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் அவர்களிடத்தில் எவ்வாறு நியாயமான தீர்வொன்றை எதிர்பார்க்க முடியும். ஆகவே அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொது ஒற்றையாடசி முறை என்பது முழுமையாக நீக்கப்படவேண்டும்.

சமஷ்டி முறைமையிலான ஆட்சி என்பது குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உறுதியாக தெரிவிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் மிக முக்கியமாக இறைமை தொடர்பான விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பது சாத்தியமாகாது.

உண்மையிலேயே அதிகாரப்பரவலாக்கல் பற்றி பேசப்படுகின்றதா? இல்லை அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்படுகின்றதா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே அவை தொடர்பாக தௌிவுபடுத்தப்பட வேண்டும்.

சுமந்திரன் எம்.பி.

தற்போது புதிய அரசியலமைப்புக்குரிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மாதம் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வௌியிடப்படுவதாக இருந்தது. இருப்பினும் மக்கள் விடுதலை முன்னணியின் கால அவகாசக் கோரிக்கையால் நாம் அதனை வௌியிடமுடியாது போனது.

அவ்வாறு வௌிப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வினாக்களுக்கான விடைகள் கிடைக்கப்பெற்றிருக்கும்.தற்போது வழிநடத்தல் குழுவானது தேர்தல் முறைமை, காணி, ஆட்சி முறைமை உள்ளிட்ட ஆறு முக்கியமான விடயங்களை தன்னகத்தே வைத்துள்ளது.

அடிப்படை உரிமை, சட்டம் ஒழுங்கு, மத்திக்கும் மகாணத்திற்கும் இடையிலான உறவு, பொதுநிதி உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

உபகுழுக்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஏனைய தரப்பினரின் கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வௌியிடப்படுவதற்காக வழிநடத்தல் குழவின் அமர்வு இடம்பெற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் மீண்டும் கால அவகாசத்தை கோரியமையால் எதிர்வரும் 10ம் திகதியும் அந்த அறிக்கை வௌியிட முடியாது போயுள்ளது.

அதேநேரம் ஒற்றையாட்சியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கின்றார். எம்முடனான சந்திப்பின் போது அவர் அதனை பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார். அது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும்.

ஒற்றையாட்சி என்பது சிங்கள மொழியில் ஏகிய ரஜய எனவும், ஆங்கில மொழியில் யுனிற்றரி எனவும் பொருள் படுகின்றது.உண்மையிலேயே சிங்களத்தில் ஏகிய ரஜய என்பது ஒருமித்த அல்லது ஐக்கிய என்று தான் பொருள்படுகின்றது. ஆங்கிலத்தில் யுனிற்றரி என்பது தான் தமிழ் மொழியில் ஒற்றையாட்சி என ஆட்சி முறையை குறிக்கும் சொல்லாக இருந்து வருகின்றது.

ஆகவே சிங்கள மொழியில் ஏகிய ரஜய என்ற சொற்பதத்துடன் அது ஆட்சி முறையைக் குறிக்கும் சொல் அல்ல என்ற அடிக்குறிப்பை இடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

பெரும்பான்மை மக்கள் ஏகிய ரஜய என்ற சொற்பதத்தை நீக்க முற்படுகையிலேயே தான் அச்சப்படுகின்றார்கள். நாடு பிளவுபட்டுவிடும் என கோஷமெழுப்புகின்றார்கள். ஆகவே நாம் அவ்வாறான அடிக்குறிப்பை சிங்கமொழியில் குறிப்பிட வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

நீங்கள் அவ்வாறு சிங்கள மொழி மூலமான ஆவணத்தில் அடிக்குறிப்பை இட்டாலும் குறித்த விடயம் தொடர்பில் எவராவது நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் ஆங்கில மொழியில் குறிப்பிட்ட விடயத்தையோ அல்லது தமிழ் மொழியில் குறிப்பிட்ட விடயத்தையோ நீதிமன்ற வியாக்கியானத்துக்கோ அல்லது பொருள்கோடலுக்கோ உட்படுத்த மாட்டார்கள்.

சிங்கள மொழி மூலமான விடயத்தையே பொருள்கோடலின் போதோ அல்லது வியாக்கியானம் அளிக்கும் போதோ கருத்திற்கொள்வார்கள்.

எனவே ஒற்றையாட்சி முறை என்பது அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படவேண்டும். அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏற்று்ககொள்வதாயின் மக்களின் ஆணையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்சி் எனக் குறிப்பிட முடியாது என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறிருக்கையில் வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் தொடர்பாக அவர்களின் தௌிவான நிலைப்பாட்டையும் வௌிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

சுமந்திரன் எம்.பி.

வடக்கு கிழக்கு என்பது அரசாங்கத்துடன் பேசும் விடயம் அல்ல. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டவுடன் நடத்தப்படும் என நான் பொய்கூறவில்லை. உடனடியாக சாத்தியம் இல்லையென்றே கூறியுள்ளேன். அது தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டவுடன் அவ்விடயம் சாத்தியமாகாது விட்டாலும் காலவோட்டத்தில் முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பில் உள்ள சந்தேகங்கள் அச்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் இணங்காத பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதாகிவிடும். ஆகவே அவர்களுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.

புதிய அரசியலமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஒரு பதையை திறப்பதாக அமையும் என்பதே எனது கருத்தாகும் என்றார்.

சித்தார்த்தன் எம்.பி

உண்மையில் நாம் தற்போது எதவுமே நடைபெறவில்லை எனக் கூறமுடியாது. ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது. அதற்கான முடிவுவரையில் நாங்கள் செல்ல வேண்டியுள்ளது. வெறுமனே எதுவுமே நடக்கவில்லை என வார்த்தை வடிவத்தில் கூறிவிட்டு அனைத்தையும் முறித்தவர்களாக நாங்கள் இருக்கக் கூடாது.

இந்த விடயத்தில் சுமந்திரனின் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகின்றேன்.இருப்பினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதற்காகவே மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே அந்த விடயத்தில் நாம் விட்டுக்கொடுப்புச் செய்ய முடியாது. அதற்குரிய நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. அதில் விட்டுக்கொடுப்புக்கள் செய்வதானது மக்களின் ஆணையை மீறுகின்றதாக மாறிவிடும் என்றார்.

ஹென்றி மகேந்திரன்

தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கே வாக்களித்துள்ளார்கள். அதிலிருந்து நாம் விலகி நிற்க முடியாது. அவ்வாறு விலகி நிற்போகமாகவிருந்தால் நாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும்.

எனவே நாம் வடக்கு கிழக்கு விடயத்தை அதீத கரிசனையுடன் பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

சட்டத்தரணி ஸ்ரீகாந்தா

வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்பது தான் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான தீர்ப்பாகும். ஆகவே அதற்குரிய ஆணையிலிருந்து நாம் விலகிச்செல்ல முடியது என்றார்.

தலைவர் சம்பந்தன்

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து பேச்சுவர்த்தை நடத்துவதற்கு முஸ்லிம்கள் அக்கறை காட்டவில்லை. அவர்கள் அதில் அக்கறை காட்டாமையின் காரணத்தாலே அந்த விடயத்தில் முடிவொன்றை எடுப்பதில் தாமதங்கள் நிலவுகின்றன. அந்த கடினமான பயணத்தை நாம் தொடர்ந்தும் கவனமாக முன்னெடுப்போம் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையென்றால் நாம் அதற்குரிய மாற்றுத்திட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

கிழக்கில் அறுபது சதவீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையும் வடக்கு மாகாணசபையும் இணைப்பது குறித்து நாம் அக்கறை காட்ட வேண்டும்.

அவ்வாறான முயற்சிகள் எடுக்கின்ற போது நிச்சயமாக முஸ்லிம்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வருவார்கள். அதன்போது நாம் அந்த விடயம் தொடர்பாக அவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றார்.

இந்தியாவுடன் பேசுங்கள்

தொடர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தது. தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது.

அதனை தனியே ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசுவதால் எவ்விதமான பயனும் கிட்டப்பேவதில்லை. ஆகவே இந்திய அரசாங்கத்துடன் இவ்விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

கூட்டமைப்பின் தலைவர் கடந்த காலங்களில் பல தடவைகள் இந்தியப் பிரதமரை உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்திருந்தார்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசியிருக்கின்றார்.

ஆனால் எதிர்கட்சித்தலைவராக பதவியேற்றதன் பின்னர் எவ்விதமான பேச்சுக்களையும் அவர் மேற்கொள்ளதிருப்பதற்கான காரணம் என்ன?

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவுக்கு செல்ல வேண்டும். அந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.இந்திய அரசாங்கமும் அதன்போது தான் எமது பிரச்சினைகள் தொடர்பில் கூர்ந்து கவனிக்கும்.

தென்னிந்திய அரசியல்வாதிகளும் கருத்திற்கொண்டு இவ்விடயங்கள் குறித்து பேசுவார்கள். இந்திய ஊடகங்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தும்.

வெறுனே இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனும் இலங்கை அரசாங்கத்துடனும் பேசிக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.

அரசியலமைப்புச் சபையிலோ வழிநடத்தல் குழுவிலோ இந்த விடயங்களை பேசி உடன்பாடுகளை எட்டவே முடியாது.

அவ்வாறு பேசுவதாக இருந்தால் அன்றே நாம் மகிந்த ராஜபக்சவின் பாரர்ளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் சென்றிருக்க முடியும். அது சாத்தியமில்லை என்பதே யதார்த்தம்.

ஆகவே இந்தியாவுக்கு அனைவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதன்போது சர்வதேசமும் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தும். என்றார்.

மாவை.சோ.சேனாதிராஜா எம்.பி

நாங்கள் ஜனாதிபதி, பிரதமருடன் இவ்விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றோம். ஆகவே பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை எனக் கூறுவது தவறாகும்.

அதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கப்படும் என சுமந்திரன் எம்.பி கூறியிருக்கின்றார். அதனை தவறாக அர்த்தப்படுத்துகின்றார்கள்.

அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால் எமது விடயங்களை முன்னெடுத்தால் நாம் கால அவகாசம் தொடர்பில் சிந்திப்போம். இ்ல்லையென்றால் அதனை நிராகரிப்போம் என்ற தொனியிலேயே அவர் கூறியிருக்கின்றார். ஆகவே அந்த நேரத்தில் நாம் அது தொடர்பாக ஆராய்வோம் என்றார்.

இரா.சம்பந்தன் எம்.பி

கடந்த 70ஆண்டுகளாக அகிம்சாவாதி தலைவர்களாலும், ஆயுதம் ஏந்திய தலைவர்களாலும் எதனையும் சாதிக்க முடியாது போயுள்ளது. தற்போது பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு சில கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளன. இவ்வாறான சந்தர்ப்பம் இதற்கு முன்னர் கிட்டவில்லை. ஆகவே கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் தட்டிக்கழிக்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் அவர் ஊடாகவே சில தீர்வுக்கான கருமங்கள் முன்னெடுக்கப்பட்டதாக சந்திரிகா அம்மையார் என்னிடத்தில் கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதி ஒரு இனவாதி அல்ல. அவர் ஒரு இடதுசாரித்தலைவர். அதேபோன்று தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு இனவாதி அல்ல. அவரும் ஒரு முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதி.

ஆகவே நாம் தற்போது முன்னெடுக்கும் கருமங்களை குழப்பியவர்களாக இல்லாது ஒற்றுமையாக இறுதி வரையில் முயற்சிகளை எடுப்போம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் நாம் தொட்டுப் பார்க்க கூட முடியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். அதேநேரம் ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.

வடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடும் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. ஆனால், முஸ்லிம்களோ வடக்கு, கிழக்கு மீள் இணைப்பில் அக்கறை காட்டவில்லை என்பதுடன் இதற்கான பேச்சுக்களிலும் ஆர்வம் இன்றியே உள்ளனர்.

இருப்பினும், இதற்குப் பல வழிவகைகள் உண்டு. மாற்றுத் திட்டங்களும் உண்டு. அவை தொடர்பிலும் ஆராயலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசாங்கத்துடன் நாம் அனைவரும் இணைந்த பேசலாம் என்றார்.

ஆர்.ராகவன்

அதேநேரம் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்குரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக வலி.வடக்கு, வலி.தெற்கு பகுதிகளில் முன்னாள் உறுப்பினர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். தமிழரசு்ககட்சி அவ்வாறு தனித்தா போட்டியிடப்போகின்றது எனக் கேள்வியெழுப்பினார்.

தலைவர் சம்பந்தன்

மாவை. சோனாதிராஜா இதற்கு பதிலளிப்பார் என்றார்.

மாவை.சேனாதிராஜா எம்.பி.

இல்லை அது தவறானது. அவ்வாறான எந்த முயற்சிகளும் இடம்பெறவி்ல்லை. நூம் கூட்டமைப்பாகவே செயற்படுவோம் என்றார்.

சட்டத்தரணி ஸ்ரீகாந்தா

எந்தக்கட்சியாகவிருந்தாலும் கூட்டமைப்பிலிருந்து விலகிச்சென்று தனித்து போட்டியிடுமாகிவிருந்தால் நிச்சயம் மக்களால் நிராகரிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விடயங்களுடன் ஒருங்கிணைப்புக் குழக்கூட்டம் நிறைவடைந்தது.

நாளை ஞாயிற்றுக்கிழமை புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயும் முழு நாள் பாராளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை கூட்டம் நிறைவடைந்த பின்னர் எதிர்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களிடத்தில் கருத்து வௌியிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களுடைய கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஔிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாகத் தமது கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள். நாங்கள் எல்லோரும் தொடர்ந்து ஒற்றுமையாக உறுதியாக எமது மக்களுக்கு ஏற்ற அரசியல்தீர்வை அடைவதற்குத் தொடர்ந்து உழைப்போம். எங்கள் முயற்சி தொடரும்.

எல்லோருடைய கருத்துக்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருப்திகரமாக நடந்தது. திருப்திகரமாக முடிவடைந்தது.

2016ம் ஆண்டில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஒரு கணிப்பின் அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதியின் முடிவின் அடிப்படையிலும், நாடாளுமன்ற முடிவின் அடிப்படையிலும் நான் இந்தக் கணிப்பைக் கூறியிருந்தேன். என்னுடைய கணிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் 2016ம் ஆண்டில் பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றும் நடைபெறவில்லை என்று நாங்கள் கூற முடியாது.

பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டது. அது செயற்பட்டு வருகின்றது. இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக 6 உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுவினர் தங்களுடைய அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

அடுத்த வாரம் பாராளுமன்றில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஆகவே, அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக பல கருமங்கள் 2016ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஒற்றுமையாக உறுதியாக செயற்படுவோம் என்றார்.

Comments