அல்ஹுசைன் மறுக்கவில்லையே! எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் ராஜித

Report Print Samy in அரசியல்

சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்கமாட்டோம் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நான் கூறியதை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஒருபோதும் மறுக்கவில்லை.

அவரது அலுவலகம் டுவிட் டர் ஊடாகமறுத்தது என்பதனை ஏற்க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் சர்வதேச நீதிபதிகளை பரிந்துரை செய்திருந்தாலும் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறை மையை பொறுத்தது என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அவ்வாறு பார்க்கும்போது சர்வதேச நீதிபதிகள் தேவை இல்லை என்ற இலங்கையின் முடிவை அல் ஹுசைன் ஏற்றுக்கொண்டதாக நான் கூறியது சரியாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சர்வதேச நீதிபதிகள் தேவை இல்லை என்ற இலங்கையின் முடிவை அல் ஹுசேன் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜித நேற்று முன்தினம் விடுத்த அறிவிப்பை ஐ.நா. மனித உரிமை அலுவலகம் டுவிட்டர் பதிவு மூலமாக மறுத்திருந்தது. அது குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்

பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறிவிட்டனர். எனவே இதுதான் இலங்கை அரசாங்கத்தின் இறுதியான நிலைப்பாடாகும். இதனை யாரும் மாற்ற முடியாது.

இந்நிலையில் நல்லிணக்க செயலணியானது சர்வதேச நீதிபதிகளை பொறிமுறையில் உள்வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்ற எமது கருத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

எனவே நான் கூறியது சரியாகும். அதில் தவறு இல்லை. முக்கியமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அதனை மறுக்கவில்லை.

மேலும் குறித்த செயலணியானது மக்களின் கருத்தை பதிவு செய்ததாக கூறுகின்றது. ஆனால் எங்கள் கிராமங்களுக்கு இந்த செயலணி வந்ததாக எங்களுக்கு தெரியவில்லை என்றார்.

Comments