போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதை பாதுகாப்பு தரப்பை சேர்ந்த சகல அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர்.
சர்வதேச தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக, கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் யோசனையை முன்வைத்துள்ள அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணிக்குழுவிடம் பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.
எனினும் இதனை நல்லிணக்க செயலணிக்குழு கண்டு கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என தெற்கு மற்றும் வடபகுதியை சேர்ந்த தமிழ் மக்கள், நல்லிணக்க செயலணிக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது எனவும் கடந்த காலத்தில் செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் செயலணிக்குழு யோசனை முன்வைத்துள்ளது.
சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க செயலணிக்குழு முன்வைத்துள்ள யோசனை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே அரசாங்கத்தின் நல்லிணக்க செயலணிக்குழு கலப்பு நீதிமன்றம் மற்றும் சர்வதேச சட்டங்களை கையாள வேண்டும் என முன்வைத்துள்ள யோசனை காரணமாக அரசாங்கம் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கை சர்வதேச நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.