இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கையான “எட்கா” இலங்கையின் அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவதை இந்தியா எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடந்த 4 ஆம் 5ஆம் திகதிகளில் கொழும்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடினர்.
இதன்போது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கடினமான அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
எனினும் முடிவுகள் எடுக்கப்படாமலும் அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமலும் கடந்த பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்தது.
இந்திய செய்தித்தாள் ஒன்றின் தகவல்படி, இந்த உடன்படிக்கையில் இந்தியாவிடம் இருந்து பல சலுகைகளை இலங்கை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையின் குறுகிய அரசியல் நிலவரங்களுக்காக இந்த யோசனைகளை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.
குறித்த உடன்படிக்கைக்கு இலங்கையில் காட்டப்படுகின்ற எதிர்ப்புக்களை மையப்படுத்தியே இலங்கை, இந்தியாவிடம் சலுகைகளை எதிர்பார்க்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பு இந்த உடன்படிக்கையை எதிர்க்கும் நிலையில் 2017ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட சந்திப்பு பெப்ரவரி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.