அண்ணா. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்தது என்ன?

Report Print Samy in அரசியல்
552Shares

நாற்காலியில் வெற்றிடம் விழுந்ததும், அதை வசப்படுத்த அசுர வேகத்தில் அரண்மனை சதி நிகழ்வதே வரலாறு நெடுக பாடங்களாக இருக்கின்றன.

ஜனநாயக வெளிச்சத்திலும் இந்த வரலாறு மாறவில்லை. பதவி வெறி என்றால் என்ன? அதிகார போதை எப்படி இருக்கும்? அதை அடைய என்னவெல்லாம் செய்வார்கள்?

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் மரணத்துக்குப் பிறகு அதற்கான அர்த்தங்களை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவர்களின் மரணத்துக்குப் பிறகு நடந்தவை என்ன? அவை சொல்லும் உண்மைகள் என்ன? இதோ ஓர் ஒப்பீடு:

உடல்நலக் குறைவு!

அண்ணா: 1968 செப்டம்பர் முதல் வாரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த அண்ணாவுக்குத் திடீரென தொண்டையில் வலி. மருத்துவப் பரி சோதனையில் புற்றுநோய் எனக் கண்டறியப் பட்டது.

எம்.ஜி.ஆர்: 1984 அக்டோபர் 5. திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்போலோவில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா: காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் அப்போலோவில் அனுமதி.

வெளிநாட்டு சிகிச்சை!

அண்ணா: அமெரிக்காவின் நியூயார்க் மெமோரியல் புற்றுநோய் மையத்தில் உலகப் புகழ்பெற்ற டாக்டர் மில்லர் தலைமையில் அண்ணாவுக்கு அறுவைச் சிகிச்சை.

எம்.ஜி.ஆர்: அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதி. இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்ததால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதற்கு முன்பு அவருக்கு என்ன நோய், எதற்காக ஆபரேஷன் என விளக்கி ‘ஆபரேஷன் வெற்றிகரமாக நடக்க வழிபாடு நடத்துங்கள்’ என எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதா: சிகிச்சைக்கு வெளிநாடு போகவில்லை. வெளிநாட்டு டாக்டர்கள் மட்டும் வந்து போனார்கள்.

போட்டோ, வீடியோ!

அண்ணா: புகைப்படம் வெளியிடப்பட்டது.

எம்.ஜி.ஆர்: புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். பேப்பர் படிப்பது, பயிற்சி செய்வது, நடப்பது போன்ற போட்டோக்களும், வீடியோவும் வெளியிடப்பட்டன. ‘உடல்நிலை’ பற்றி எழுந்த கேள்விகளுக்கு இவை விடைகளாக அமைந்தன.

ஜெயலலிதா: நோ போட்டோஸ்... நஹி வீடியோஸ்.

மரணம்!

அண்ணா: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை. இதயத் துடிப்பு குறைந்ததால் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது. பிறகு மூச்சுக்குழாயில் துளை போட்டு அதன் மூலம் சுவாசிக்க வைத்தனர். 1969 பிப்ரவரி 3-ம் தேதி நள்ளிரவு 12.20 மணிக்கு உயிர் பிரிந்தது. அமைச்சர் நெடுஞ்செழியன் கண்ணீரோடு பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார்.

எம்.ஜி.ஆர்: நள்ளிரவு (1987 டிசம்பர் 24-ம் தேதி) 12.30 மணிக்கு பாத்ரூம் சென்றவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைய, அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது.

ஜெயலலிதா: மரணத்தை அப்போலோதான் அறிவித்தது. அதற்கு முன்பாகவே அவர் மரணம் தொடர்பான செய்திகள் மாறி மாறி முரண்பாடாக வந்துகொண்டிருந்தன.

ராஜாஜி ஹால்!

அண்ணா: அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், அக்கா நாகம்மாள் மற்றும் உறவினர்கள் உடலுக்கு அருகில் அழுதபடியே நின்றிருந்தனர்.

எம்.ஜி.ஆர்: உடலுக்கு அருகில் மனைவி ஜானகி அம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தார்கள்.

ஜெயலலிதா: சசிகலா குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்திருந்தார்கள்.

அஞ்சலி நேரம்!

அண்ணா: 3-ம் தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து 4-ம் தேதி காலை 8.15 மணி வரை.

எம்.ஜி.ஆர்: 24-ம் தேதி காலை 10 மணியில் இருந்து 25-ம் தேதி காலை 11 மணி வரை.

ஜெயலலிதா: காலை 6 மணி டு மாலை 4.30 மணி வரை.

இறுதி ஊர்வலம்!

அண்ணா: ராணுவ வண்டிக்குப் பின்னால் அண்ணாவின் உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள் கார்களில் வந்தார்கள். ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலம் அண்ணா சாலை வழியாக ஜெமினி வந்து கதீட்ரல் சாலை வழியாக உழைப்பாளர் சிலையை அடைந்தது.

எம்.ஜி.ஆர்: ராணுவ வண்டிக்குப் பின்னால் எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் ஒரு வேனில் சென்றனர். அண்ணா இறுதி ஊர்வலம் நடந்த பாதையிலேயே எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது.

ஜெயலலிதா: சசிகலா, அவரது உறவினர்கள் ராணுவ வண்டியில் இருந்தனர். அண்ணா சாலை வழியாக நீண்ட தூரத்துக்கு ஊர்வலம் போகவில்லை. வாலாஜா சாலையிலேயே திரும்பி கடற்கரையை அடைந்தது.

தற்காலிக முதல்வர்!

அண்ணா: அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக கவர்னர் உஜ்ஜல் சிங் நியமித்தார்.

எம்.ஜி.ஆர்: அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கு தற்காலிக முதல்வராக கவர்னர் குரானா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெயலலிதா: தற்காலிக முதல்வர் நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் இருந்தபோது கவர்னர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மொத்த அமைச்சரவையும் பதவியேற்றது.

புதிய முதல்வர்!

அண்ணா: முதல்வர் பதவியை நெடுஞ்செழியன் விரும்பினார். ஆனால், பெரும்பாலானவர்கள் ‘கருணாநிதிதான் சாய்ஸ்’ என்றார்கள். பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் விருப்பமும் அதுதான். அண்ணா இறந்த 7-வது நாள் அதாவது, பெப்ரவரி 9-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 10-ம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. அண்ணா அமைச்சரவையில் இருந்தவர்கள் மீண்டும் பதவியில் அமர்ந்தார்கள், நெடுஞ்செழியன் தவிர்த்து.

எம்.ஜி.ஆர்: தற்காலிக முதல்வர் நெடுஞ்செழியன், முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார். ‘பெரும்பான்மையோர் விருப்பத்துக்கு ஏற்ப முதல்வர் பதவி ஏற்க சம்மதிக்கிறேன். நெடுஞ்செழியன் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என அறிக்கை விட்டார் ஜானகி அம்மாள். ஜானகி அம்மாள் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் அரசு டிஸ்மிஸ் ஆனது.

ஜெயலலிதா: அப்போலோவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கே ஓ.பன்னீர்செல்வத்தைப் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கட்சித் தலைவர்!

அண்ணா: ஆறு மாதங்கள் கழித்து 1969 ஜூலை 26-ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூடியது. அதுவரை இருந்துவந்த ‘அவைத் தலைவர்’ பதவியை ‘தலைவர்’ என்று மாற்ற முடிவு செய்தார்கள். அதன்படி, தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் தேர்வு செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்: நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தார்கள். அது செல்லாது என ஜானகி அம்மாள் தரப்பு சொன்னது. கட்சி பிளவுபட்டது.

ஜெயலலிதா: ஜெ. இறந்த பிறகு ‘சசிகலாதான் தலைமையேற்க வேண்டும்’ என நிர்வாகிகள் எல்லாம் சொல்லி வைத்ததுபோல சொல்ல ஆரம்பித்தார்கள். 24-வது நாள் அவசர(!) பொதுக்குழு கூட்டி, சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தார்கள்.

இப்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கும். அண்ணா, எம்.ஜி.ஆர் உடல்நிலை குன்றியபோதும், மறைந்தபோதும் காட்டப்பட்ட வெளிப்படைத் தன்மையும், அரசியல் நிதானமும், ஜெயலலிதா மரணத்தில் மயான அமைதி பெற்றிருந்தது.

வெளிநாட்டுச் சிகிச்சை மறுக்கப்பட்டதும், போட்டோகூட வெளியிடப்படாததும், உறவினர்களைக்கூட அனுமதிக்காமல் ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி மன்னார்குடி உறவுகள் அரண் அமைத்ததும், பொதுமக்கள் அஞ்சலிக்கு முழுதாக ஒருநாளைக்கூட தராததும் ஏன்? எதைப் பிடிக்க(!) இவ்வளவு அவசரம்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பதவியேற்ற ஓ.பன்னீசெல்வம், ஜெயலலிதாவின் மரண விநாடிகளில் காத்திருக்காமல் கவர்னர் மாளிகைக்கு ஓடினாரே, ஏன்? தலைவி இறந்த துக்கத்தில் இருக்கும்போது புது அமைச்சரவைப் பதவியேற்பு கண்களை உறுத்தாதா?

குடியரசு, சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்த, அதற்கு முன்பு ஒத்திகைகள் நடக்கும். போக்குவரத்து நிறுத்தப்படும். காவல் துறையினர் அணிவகுப்பு நடத்துவார்கள். அலங்கார ஊர்திகள் எப்படிப் போக வேண்டும், கவர்னர் மற்றும் முதல்வர் கார்கள் எந்த திசையில் இருந்து வரும், யார் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என பக்காவாக ஒத்திகையில் பாடம் எடுப்பார்கள்.

இப்படிப் பலநாள் ஒத்திகைக்குப் பிறகு நடக்கும் விழாவில் தேசியக் கொடி கயிற்றில் சுற்றிக்கொண்டு ஒழுங்காகப் பறக்காது. பூ தூவும் ஹெலிகாப்டர் உரிய நேரத்துக்கு வராமல் போகும். மைக் மக்கார் செய்யும். ஆனால், இப்படி எந்த ஒத்திகையும் பார்க்காமலே கச்சிதமாக நடந்து முடிந்திருக்கிறது சசிகலா மணிமுடி தரிப்பு வைபவம்.

அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், ‘கழகத்தின் பொதுச் செயலாளராக தலைமையேற்க தலைமகளே வா’ என்ற பேனர்கள், ‘சின்னம்மா தான் தலைமையேற்க வேண்டும்’ என கிளைக் கழகம் வரையில் தீர்மானம், போயஸ் கார்டனுக்குள் வந்து சசிகலாவிடம் கெஞ்சல்கள், பொதுக்குழு கூட்டி அங்கே தீர்மானம், தலைமைக் கழகத்தில் பொறுப்பேற்பு, பக்காவான உரை என அச்சுபிசகாமல் நடத்தப்பட்ட நாடகத்துக்கு ஒத்திகையே நடக்கவில்லை. இது ஆஸ்காருக்கு நேர்ந்த அவமானம்.

1969 ஜனவரி 14-ம் தேதி வெளியான ‘காஞ்சி‘ பொங்கல் மலரில் தன்னுடைய உடல் நலிவடைந்திருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொன்னார் அண்ணா. ‘தம்பிகளுக்கு’ எழுதிய கடிதத்தில் உண்மையைப் போட்டு உடைத்தார்.

‘எந்தப் பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ, அந்தப் பணியினை முன்புபோல செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் என்பதனை அறிவாய்.

கடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய அளவுக்கு உடல்நலம் பாழ்பட்டது’ என எழுதியிருந்தார் அண்ணா.

அந்த அண்ணாவின் பெயரைக் கொண்ட அண்ணா தி.மு.க-வின் தலைவிக்கு என்ன ஆச்சு என்கிற கேள்விக்கு விடையே தெரியவில்லை.

‘‘தந்தை பெரியாரின் தன்மானம்! பேரறிஞர் அண்ணாவின் இனமானம்! எம்.ஜி.ஆரின் பொன்மனம்!’’ என ரைமிங் பேசிய சசிகலா, அண்ணா தன் உடல்நிலையை வெளிப்படையாகச் சொன்னதுபோல, எம்.ஜி.ஆர் போட்டோவை வெளியிட்டது போல, ‘ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது’ என்பதை ஏன் சொல்லவில்லை?

அண்ணா இறந்த 6-வது நாள். அவர் புதைக்கப்பட்ட அதே கடற்கரையில் 1969 பிப்ரவரி 8-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி, பெரியார், ராஜாஜி, கவர்னர் உஜ்ஜல் சிங்,

எம்.ஜி.ஆர், ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி என இந்திய அரசியல்வாதிகள் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம்கூட நடத்த முடியாமல் சசிகலாவுக்கு மகுடம் சூட்டு விழாவை நடத்துகிற வித்தைக்குப் பெயர்தானே பதவி வெறி!

நீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்து கார்டனில் முடங்கிக் கிடந்த போது, அரசு திட்டங்களை அவர் வந்து தொடங்கி வைக்கக் காத்திருந்தார்கள்.

ஏன், கட்சியின் பொதுக்குழுவையே அந்த ஆண்டு கூட்டவில்லை. ஆனால், இறந்த பிறகு அவசரப் பொதுக்குழு கூட்டியது, கிரீடத்தை இடம் மாற்றி வைக்கத்தானே!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 2014 செப்டம்பர் 27-ம் தேதியே ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. அந்தத் தொகுதி காலியானது என்பதை நவம்பர் 12-ம் தேதி அறிவித்தது சட்டமன்றம். அதாவது 47 நாட்கள் கழித்து அரசாணை வெளியிட்டார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியானது என்கிற அறிவிப்பு 18-வது நாளிலேயே வெளியாகி விட்டது. ‘இடைத் தேர்தல் உடனே நடக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட இந்த ஏற்பாடு யாருக்காக?

கழுத்து வரை மறைக்கும் ஜாக்கெட் தைக்க காலமும் கூந்தலை முடித்து அதற்கு வலை பின்ன நேரமும் இருக்கிறது. ஜெயலலிதா போல ஸ்டைல் பண்ண முடிந்த உங்களின் அரசியல், தமிழகத்தில் இதுவரை எழுதப்படாத புதிய அத்தியாயம்.

- Vikatan

Comments