விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட உள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று கேகாலை நகரில் இடம் பெற்ற விகாரை திறப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பிக்குகள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை காவி உடைக்கும் தீ வைக்கப்பட்டது இது முற்றிலும் முறைகேடான செயல்.
இப்போது அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு கொடுக்க உள்ளது 15000 ஏக்கர் அல்ல 20000 ஆயிரம் ஏக்கர்கள். எனது ஆட்சியின் போது 1000 ஏக்கர்களைக் கேட்டார்கள் ஆனால் நான் 750 ஏக்கர் மட்டுமே தர முடியும் என்றேன்.
அம்பாந்தோட்டை என்பது முழு நாட்டுக்கும் சொந்தமானது அதனை விற்க முயற்சி செய்கின்றார்கள். நாளை பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு என்ன மிச்சம் இருக்கப்போகின்றது.
பௌத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை ஆட்சிக்கு வரும் போது இவ்வாறு சொல்லவில்லை ஆனால் இப்போது சொல்லாததையே செய்து வருகின்றார்கள்.
நேற்று கற்களால் அடித்தும் பொல்லுகளால் அடித்தும் பிக்குகள் மீது தாக்குதல் நடத்தி ஐந்து சதத்திற்கும் கணக்கிட முடியாத செயலை செய்துள்ளார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எவ்வாறாயினும் விரைவில் விமல் வீரவன்சவையும் கைது செய்து விடுவார்கள், அதற்கான திட்டமும் தீட்டப்பட்டு விட்டது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை நாமல் ராஜபக்சவிற்கும் கைது அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். விமல் வீரவன்ச மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இப்போது கைது செய்யப்படப்போவது எதற்காக என்பது இப்போதைக்கு முக்கிய கேள்வியே.