இந்த நாள்..! இலங்கைக்கு முக்கிய திருப்புமுனையாக மாறிய நாள்! நினைவிருக்கின்றதா?

Report Print Shalini in அரசியல்
137Shares

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில், (2015.01.09) அன்று இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்.

மஹிந்த மைத்திரிக்கு இடையில் இடம்பெற்ற கடுமையான போட்டியில் மஹிந்தவை தோற்கடித்து மைத்திரி தேர்தலில் வெற்றி பெற்றது இந்த நாளில்தான்.

அன்று வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகப்பூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிட்டார்.

அதன் பின்னர் இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாகவும், 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகவும் மைத்திரி பதவியேற்றார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இ.கே.நீதியரசர் சிறிபவன் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

அன்றிலிருந்து இன்றுவரை நாடு கண்ட முன்னேற்றங்கள் ஏராளம், அதே போல் ஜனாதிபதி சந்தித்த விமர்சனங்களும் ஏராளம்.

ஆனால் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் ஒரு சிறந்த இடத்தினையும், தனித்துவத்தையும் மைத்திரி பெற்றுள்ளார்.

வெளிநாட்டு பயணங்களின் போதும், நாட்டிற்குள் வரும் பிற நாட்டு அதிகாரிகளிடமும் ஒரு நல்ல அபிப்பிராயங்களையே மைத்திரி பெற்றுள்ளார்.

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரிக்கு இன்றளவில் அதே ஆதரவு இருக்கின்றது.

எனினும் நாட்டை குழப்புவதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதியும் பிரதமரும் அவற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாத்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் இந்த நிலையில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.

எனினும் இந்த இரண்டு வருடங்களாக செயற்றிட்டம் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. இனி வரும் காலப்பகுதியில் அதற்கான பலனை அனுபவிப்பீர்கள் என நிதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் மிகுதியாக உள்ள காலப்பகுதியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments