தனது அரசியல் வாழ்க்கை, பதவி, குடும்ப நிலை என்பவற்றை கருத்தில் எடுக்காமல் தேர்தல் களத்தில் இறங்கி ஊழல் அற்ற நாட்டை உருவாக்க முனைந்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எவ்.ரகுமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 2 வருடங்கள் பூர்த்தியினை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு நேற்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமையேற்று கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எவ்.ரகுமான் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டை ஊழல்களற்ற, தூய்மையான, பரிசுத்தமான நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேன, தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.
அன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் இறங்கப் போகின்றார் என்று அறிந்தவுடனே அவர் அநியாயமாக சூசைட் பண்ணப்போகின்றார் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
ஆனால் அவர் தன்னுடைய உயிரையும் துச்சமென நினைத்தே இதனை சாதித்துக்காட்டியிருக்கிறார்.
இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது இந்த நாட்டை ஒரு ஊழல் அற்ற தூய்மையான ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்பதே.
ஆரம்பத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் செய்யும் சிறு சிறு ஊழல்களே பின்பு பெரிதாக மாற்றமடைந்து ஊழல் நிறைந்த ஒரு தேசமாக மாற்றமடைகின்றது.
இந்த ஊழலை தடுக்க வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே தொழில் புரிகின்ற அரச ஊழியர்கள், அரசியல் வாதிகள், மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனதில் சரியான உறுதிமொழியை எடுத்து செயற்பட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.
மேலும் அவ்வாறு ஒவ்வொருவரும் உறுதிமொழியை எடுத்து செயற்படுகின்ற போது தான் இந்த நாட்டை ஊழல் அற்ற ஒரு நாடாக மாற்றியமைக்க முடியும் எனவும் ஏ.எல்.எவ்.ரகுமான் இதன்போது வலியுருத்தினார்.