ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Report Print Samy in அரசியல்
281Shares

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நேரிடும் என எச்சரித்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து பல சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெ ற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல, நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஞானசேகரன், டிராபிக் ராமசாமி ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களும் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது. எனவே, மருத்துவ நிபுணர்கள், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து ஜெயலலிதாவின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி அவர்களது உறவினர்கள் யாரும் இதுவரை இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடராதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அனைத்தும் எங்களிடம் தயாராக உள்ளது. அந்த விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற பெப்ரவரி 23ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இணை இயக்குனர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

- Maalai Malar

Comments