இலட்சியப் போராட்டத்தை வென்றெடுப்போம்! மு.பா உறுப்பினர் சொலமன் சிறில் அழைப்பு

Report Print Thamilin Tholan in அரசியல்

சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்து மறைந்தவர்களை சாவு என்றும் சாகடிப்பதில்லை. அவர்கள் தமிழ்மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நாம் எமது இன ஒற்றுமை தொடர்பில் வாய்ச் சொல்லுடன் மாத்திரம் நின்று விடாது எமது ஆழமான இதயத்திலிருந்து ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

நாம் அனைவரும் ஒரு கொடியின் கீழ் திரண்டு எமது இலட்சியப் போராட்டத்தை வென்றெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சு.சிறில்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியானவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று முற்பகல் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னாலுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒன்பது தமிழ்பேசும் நல்லுயிர்களைக் காவு கொண்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

நாங்கள் இந்த நினைவு கூரல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துவது மறந்து போன விடயங்களைத் தமிழ்மக்களுக்கு மீண்டும் நினைவூட்டவல்ல.

ஆனால், அவர்களுடைய இலட்சியங்கள் இந்த நாட்டிலே நீண்டு நிலை பெற வேண்டும் என்பதே எங்களுடைய அவா.

தமிழ்மக்கள் தனித்துவமாக வாழ வேண்டும் என்ற அதி உயர்ந்த இலட்சியத்துடன் தனிநாட்டுக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். அந்த இலட்சியத்தின் இலக்குத் தவறினாலும் நாம் கொண்ட இலட்சியம் என்றென்றும் மாறாது.

அந்த இலட்சியத்துக்காகவே நாங்கள் தொடர்ந்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

இந்த நினைவு கூரல் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திருமதி-அனந்தி சசிதரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

1974 ஆம் ஆண்டு நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெறுகிறது.

எங்களுடைய மக்கள் எமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடிய காலகட்டத்திலிருந்து அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டதன் விளைவாக ஆயுதப் போராட்டம் எம் மண்ணில் உருவானது. தமிழ்மக்கள் இன அழிப்பிற்கு ஆளானதொரு நிலையில் சரியானதொரு நீதியை இதுவரை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

கடந்த கால யுத்தம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

Comments