அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு ட்ரம்பின் முதன்மை ஆலோசகராக அவரது மருமகன் நியமிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியிருந்தார்.
அவர், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அந்த வரிசையில், இப்பொழுது புதுத் தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
எதிர்வரும், 20ம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய முதன்மை ஆலோசகராக தனது மருமகனை நியமித்துள்ளார் என தெரியவருகிறது.
இதேவேளை, ட்ரம்ப் அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
ட்ரம்பின் மருமகனுமான ஜெராட் குஷ்னர் அதிபரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக தேர்தலின் போது, மருமகனின் ஆலோசனையின் பேரிலேயே ட்ரம்ப் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது.
தற்பொழுது குஷ்னர் நியமிக்கப்படுவதன் மூலம் அவரின் ஆதரவாளர்களே அமைச்சரவையில் அதிகம் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜார்ஜ் புஷ், கிளிண்டன் ஆகியோர் வரிசையில் அமெரிக்க அரசியலில் குடும்ப அரசியல் ஆதிக்கம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கையிலும், இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் குடும்ப அரசியலை நடத்தியிருந்தார். இதனால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இது குறித்து தமது கவலைகளை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள ட்ரம்ப் தன்னுடைய அமைச்சரவையில் குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பார் என்று எதிர்வு கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.