அனுமனுக்கு தனது பலம் தெரியாது என்று கூறுவார்கள். அனுமன் செய்யும் ஒவ்வொரு வேலையும் பிறருக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறது. ஆனால் அது அந்த ஆஞ்சநேயருக்கு தெரியாது என்று கூறுவார்கள். அவ்வாறான சில விடயங்களும் தற்சமயம் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன.
எதிர்க் கட்சியை அல்லது மகிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறி சில அரச தரப்பு உறுப்பினர்கள் தமது கட்சித் தலைவர்களையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் நன்கு விமர்சித்து வருகின்றனர்.
விசேட அமைச்சர் பிரேரணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்த பின்னர் பெரும்பாலான மாகாண முதலமைச்சர்கள் பிரதமர் ரணில் மீதும் ஐக்கிய தேசிய கட்சி மீதும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் சாதகமாக அமைந்துள்ளது. கூட்டு எதிர்க் கட்சிக்கும் சாதகமான நிலைமையை தோற்றுவித்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய வெளியிட்ட கருத்துக்கள் இதனைச் சான்று பகர்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும்பாலும் இந்த அரசாங்கத்திற்கு ஊது குழலாக இருப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, முஜிபுர் ரகுமான், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் பிரதி அமைச்சர்களான ஹர்ச டி சில்வா, சுஜீவ சேனசிங்க ஆகியோராவர். ஆனால் அந்தக் கட்சியில் பலமான தூண்களாகக் கருதப்படுகின்ற சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா போன்றவர்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருக்கின்றனர்.
ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பசுமை கட்டிட நிர்மாண வழிகாட்டல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள அமைச்சர்களான பாட்டலி சம்பிக ரணவக்க மற்றும் அர்ஜீன ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இரண்டு அமைச்சர்களும் இப்போது ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் போன்று தெரிகிறது. வேறு அமைச்சர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதியும் தனது அண்மைக்கால உரைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வெகுவாக சாடுவதில்லை என்பதும் தெரிகிறது. இந்தக் காய் நகர்த்தல்கள் ஏதோ நோக்கத்தோடு இடம்பெறுவது போன்று தெரிகிறது. இதன் இறுதி முடிவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது.