புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு இல்லை - எஸ்.பி. திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான மக்களின் ஆணை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமே அன்றி 2020 ஆம் ஆண்டு வரை புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் நிராகரித்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று ஏற்பாடு என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜனாதிபதிக்கு அவ்வாறு விருப்பமின்மையை வெளியிட முடியாது என்பதே எங்களுடைய நிலைப்பாடு. அப்படியானால் ஏன் அவர் கட்சியை பொறுப்பெடுத்தார். அப்படியானால் அவர் மறுக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு எனக் கூறியுள்ளார்.

இதனிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனக் கூறியிருந்தார்.

கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இரத்துச் செய்யப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments