பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் மின்வெட்டு.!

Report Print Karan in அரசியல்

எமது நாட்டிலே தற்சமயம் நிலவி வரும் அசாதாரண வரட்சி காலநிலை காரணமாக நாட்டின் நீர் நிலைகள் தூர்ந்து போயுள்ளன. இது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் மின் உற்பத்தியில் 50 வீதத்திற்கும் அதிகமான கொள்ளளவு நீர் மின் உற்பத்தியிலேயே தங்கியுள்ளது. இந்த நிலை இன்னும் மாறவில்லை.

நாட்டில் தற்சமயம் பெரும்பாலான நீர் உற்பத்தி நிலைகளில் 35 வீத நீர் மின் கொள்ளளவே காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் சுமார் 95 வீத நீர் மின் கொள்ளளவு காணப்படுவது வழமை என்று எரிசக்தி மற்றும் மாற்று சக்தி பிறப்பாக்கல் துறை பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் வெட்டை அமுல்படுத்துவதாயின் அதனை பாவனையாளர்களுக்கு முன்னர் அறிவித்து விட்டே செய்வோம் என்று கூறியிருக்கிறார்.

இது ஒரு வேடிக்கையான கூற்றாகவே கருத வேண்டியுள்ளது. முன் அறிவித்தல் கொடுத்துவிட்டு செய்தால் என்ன? சொல்லாமல் செய்தால் என்ன? மின் வெட்டு மின் வெட்டுதானே. இத்தகைய கோமாளிகளும் சமகால அரசாங்கத்தில் இருப்பது கவலை தருகிறது.

ஏற்கனவே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இந்த மின் வெட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை எற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

விமான நிலையம் 8 மணி நேரம் மூடப்பட்டதால் பாதிப்பு வேறு. மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டால் நாட்டின் முக்கிய கைத்தொழில்துறை, உற்பத்தி துறை, சேவைத்துறை மற்றும் வர்த்தக துறையும் வெகுவாக பாதிக்கப்படும். நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் நலிவடையச் செய்யும் செயலாகவே இது அமையவுள்ளது.

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் நாட்டில் எத்தகைய பாரிய அழிவு ஏற்பட்டாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாது தமது பரப்புரைகளை மேற்கொள்ள ஊடக சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு பொறுப்பற்ற தன்மையையே வெளிக்காட்டுகிறது. நல்லாட்சி வீழ்ச்சியையே இது எடுத்து காட்டுகிறது. மாற்று சக்தி பிறப்பாக்கல் மூலங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தவில்லை.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு மீள கிடைக்கப்பெற்றுள்ளதை என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிகள். அதனால் உண்மையான நன்மைகளை பெற நாட்டில் சக்தி பிறப்பாக்கல் மூலங்கள் போதுமானதாக உள்ளதா என்பதை பற்றிச் சிந்திக்கவில்லை.

ஒரு வசதி கிடைத்தால் அது எமக்கு முழுமையாகப் பயன் தர வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சிகளை அரசாங்கத்தில் எவரும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

Comments