விமல் வீரவங்சவின் கைது அரசியல் பழிவாங்கல்: தே.சு.முன்னணி

Report Print Steephen Steephen in அரசியல்
33Shares

பொதுமக்களின் 145 பில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்திய இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு அதற்கான ஆலோசனையை வழங்கியது பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்று கோப் குழுவில் உறுதியாகிய நிலையில், இவர்கள் இருவரிடம் வாக்குமூலம் ஒன்றைக் கூட பெறாத பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, அரச வாகனங்களை தவறாக பயன்படுத்த உதவிய குற்றச்சாட்டில் விமல் வீரவங்சவை சிறையில் அடைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் இல்லை என்றால் வேறு என்ன என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற்றக்கோட்டே உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து எமது கட்சியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அவற்றை நிரூபிக்க முடியாது போனது.

இரண்டு வருடங்களின் பின்னர் இந்த அரசாங்கம் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்த உதவினார் என்ற பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்று நிதி மோசடி விசாரணைப் பிரிவு குற்றம் சுமத்தவில்லை. அதற்கு உதவினார் என்றே குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத மற்றும் தேசத்துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக பெரியளவில் அழுத்தங்களை கொடுத்து, அவற்றுக்காக மக்களை அணிதிரட்டும் முன்னணி அரசியல் தலைவர் விமல் வீரவங்ச என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனால், அவரை வாயை மூடி தற்காலிகமாகவாவது அவரது அரசியல் செயற்பாடுகளை நிறுத்தும் தேவை மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு இருந்தது. இந்த தேவையையே அவர்கள் நேற்று நிறைவேற்றியுள்ளனர் எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Comments