நாட்டின் தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள அனைத்தையும் பலி கொடுத்து வருகிறது எனவும் இது ஹம்பாந்தோட்டையில் தற்போது உறுதியாகி இருப்பதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீட்டுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மாத்திரமல்ல, மக்களின் காணிகளையும் அரசாங்கம் பலி கொடுத்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு மருதானையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் அண்மையில் அபிவிருத்தித் திட்டம் எனக் கூறி பல்வேறு திட்டங்களை ஆரம்பித்தது. இவற்றின் உண்மை சரியாக வெளிவரவில்லை. வெளிப்படையான நிலைமை இல்லை.
கடந்த அரசாங்கங்களை போல் பொய்க்கு மேல் பொய் கூறுவது இங்கு நடக்கின்றது எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.