தாய் மண்ணையும் இழக்கும் மகிந்த! சீனாவை சீண்டி சீற்றமடையச் செய்த நாமல்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஹம்பாந்தோட்டையில், சீனா - இலங்கை கைத்தொழில் பேட்டையை ஆரம்பிக்கும் நிகழ்வை சீர்குலைக்க ராஜபக்சவினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சீன அரசாங்கம் ராஜபக்சவினர் மீது கடும்கோபத்தில் இருப்பதாக ராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது சீன அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.

இந்தியாவிற்கு முன்னுரிமை கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு சீனாவை அனைத்து தன்பக்கம் வைத்திருந்தார்.

குறிப்பாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது, இலங்கை சீனாவின் இன்னொரு மாநிலமாக மாறியிருந்தது என அக்காலகட்டத்தில் விமர்சிக்கப்பட்டதுடன், இந்தியாவின் எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தார்.

எனினும், சீனாவுடனான அவரின் நெருக்கம் குறைந்திருக்கவில்லை. சீனாவுடனான மகிந்தவின் தொடர்பானது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் கடும் சவாலாகவே இருந்தது.

இந்நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்த முன்னின்று உழைத்தது அமெரிக்காவும், இந்தியாவும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சி நாட்டில் இல்லாது செய்யப்பட்டு, மைத்திரி, ரணில் தலைமையிலான மாற்று அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரி- ரணில் அரசு ஆரம்பத்தில் சீனாவுடனான நெருக்கத்தை குறைத்திருந்தாலும், காலப்போக்கில் சீனாவின் தேவையை இன்றைய அரசாங்கம் உணர்ந்தது.

மகிந்த ராஜபக்சவின் பாணியில் நட்பை புதுப்பித்துக்கொண்டது மைத்திரி - ரணில் அரசு. நாட்டின் அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்திக்கு சீனாவுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ராஜபக்சவினரை அழைத்து உத்தேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இது ராஜபக்சவினர் ஆட்சியில் இருக்கும் போது சீனா முன்வைத்த திட்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த நாமல் ராஜபக்ச, இந்த அபிவிருத்திப் பணியை தமது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை.

இதேவேளை இது குறித்து சீன தூதரகம் நாமல் ராஜபக்சவிடம் உறுதிமொழி ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ராஜபக்சவினர் வழங்கிய இந்த உறுதிமொழிக்கு அமையவே அன்றைய தினம் சீனாவின் முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்திருந்தது.

எனினும் உறுதிமொழியை வழங்கிய நாமல், அதனை கடைப்பிடிக்கவில்லை.

ஹம்பாந்தோட்டையில், சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

ராஜபக்சவினரின் தூண்டுதலால் ஹம்பாந்தோட்டையில் அன்றைய தினம் பதற்றத்தை ஏற்படுத்தியதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தமது தூதரகத்தில் வாக்குறுதியை வழங்கிய நாமல் ராஜபக்சவே முன்னணியில் வந்து கற்களை வீசி மக்களை தூண்ட காரணமாக இருந்தமை குறித்து சீனா கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

யுத்தத்தின் ஆரம்பத்தில் ராஜபக்சவினருக்கு உதவிகளை வழங்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான் ஆகிய சகல நாடுகளை ராஜபக்சவினர் தமது ஆட்சிக்காலத்தில் பகைத்து கொண்டனர்.

சீன அரசாங்கம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது, மகிந்தவிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியான காலக்கட்டங்களின் போதெல்லாம் பல்வேறுவிதமான உதவிகளை வழங்கியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர் பார்க்கப்பட்டிருந்த வேளையிலும் கூட சீன அரசாங்கம் நேரடியாக இலங்கைக்கு தன்னுடைய ஆதரவினைக் காட்டி நின்றதுடன், இலங்கையை காப்பாற்றியும் இருந்தது.

அதுமாத்திரமல்லாது, ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்சவினை சீன அரசாங்கம் கைவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்தாண்டு மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வமாக சீனாவிற்கு அழைத்துப் பேசியிருந்தது.

ஆனால், சீன அரசாங்கம் இன்றைய அரசாங்கத்தோடு போட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படமாட்டோம் என வாக்குறுதி வழங்கிவிட்டு, மக்களை அதற்கு எதிராக தூண்டிவிட்டமையானது, சீனாவை சீற்றமடைய வைத்திருக்கிறது.

இதற்கிடையில் நாட்டில் செல்வாக்கு இழந்துவரும் மகிந்த ராஜபக்சவின் சொந்த பிரதேசமும் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஆட்சிக்காலத்தின் போது, அனைத்து அபிவிருத்திகளையும் சீனாவைக் கொண்டு ஹம்பாந்தோட்டையில் முன்னெடுத்திருந்தார் மகிந்த.

ஆனால், இன்று அதே சீனாவைக் கொண்டு அதே ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்ய மைத்திரி, ரணில் அரசாங்கம் முன்னின்று செயற்படும் பொழுது அது மகிந்த ராஜபக்சவிற்கு பயத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் செல்வாக்கை இழந்தவர்கள், இனி சொந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இழந்துவிடுவோமா என்னும் ஏக்கமே இது.

இதனால் தான் நெருங்கிப் பழகிய சீனாவையும் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

இதுவரை காலமும் சீனாவை நம்பியிருந்த மகிந்த ராஜபக்ச இப்பொழுது அந்த அரசாங்கத்தையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆபத்தென்றால் சீனாவிடம் ஓடிய மகிந்த இனி எத்திசை நோக்கி ஓடுவாரோ? ஹம்பாந்தோட்டையின் செல்வாக்கையும் இழப்பார் போன்றே தோன்றுகிறது.

தாய் மண்ணே கைவிடும் நிலைவந்தாலும் வரும்.

Comments