நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவிப்பினை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த 12ம் திகதி அறிவித்திருந்தார்.
எனினும், இந்த அறிவிப்பில் உண்மையில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அவ்வாறான ஓர் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஒரு போதும் உடன்படப் போவதில்லை. இவ்வாறு வீசா வழங்கப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும்.
மூன்று லட்சம் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் சிறிய முதலீடாகும். அவ்வாறான தொகையைக் கொண்டு கொழும்பில் இரண்டு பர்சஸ் காணியையே கொள்வனவு செய்ய முடியும்.
இவ்வாறு வீசா வழங்குவது உள்ளுர் சிறு வர்த்தகர்களுக்கு பிரச்சினையாக அமையும். இவ்வாறான யோசனைத் திட்டம் நகைப்பிற்குரியதாக அமைந்துவிடும்.
இவ்வாறான யோசனைத் திட்டமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால் அது அமைச்சரவையிலேயே தோற்கடிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.