சின்னம்மாவுக்கு வழிவிட ஓ.பி.எஸ் தயாராக இருக்கிறார்!

Report Print Samy in அரசியல்
376Shares

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரது சொந்த மாவட்டத்தினரே தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின், ‘முதல்வர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்ட முதல் மாவட்டமே, ஓ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான தேனிதான். இதில் கொஞ்சம் அதிகமாகவே கதிகலங்கிப்போனார் ஓ.பி.எஸ்.

அ.தி.மு.க-வின் தேனி மாவட்டச் செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்ச்செல்வன். இவருக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.

பன்னீர்செல்வம், அவருடைய மகன்கள் மற்றும் தம்பி ஓ.ராஜா ஆகியோரின் ஆதிக்கத்தை மீறி, நீண்ட காலமாக தேனி மாவட்டச் செயலாளராக இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

அவரிடமிருந்து சில வருடங்களுக்கு முன், மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, ஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு வழங்கப்பட்டது.

இதனால் கலங்கிவிடாத தங்க தமிழ்ச்செல்வன், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் கைப்பற்றி, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வாகவும் ஆகிவிட்டார்.

இப்போது, பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவியைக் காலி செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வனை சந்தித்தோம்.

ஓ.பி.எஸ் முதல்வராக நீடிப்பது தேனி மாவட்டத்துக்குப் பெருமைதானே. ஏன், ‘சசிகலா முதல்வராக வரவேண்டும்’ என்று குரல் கொடுக்கிறீர்கள்?

இதில் மாநிலம், மாவட்டம் என்று பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்டம், முதல்வர்களின் மாவட்டம் என்ற தேனி மாவட்டத்தின் பெருமைகள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை கட்சிப் பொறுப்பு, ஆட்சிப் பொறுப்பு ஆகிய இரண்டையும் ஒரே தலைவரே வகிக்க வேண்டும். புரட்சித் தலைவர் காலத்திலிருந்து அதுதான் நடைமுறை. அப்போதுதான் சிறப்பான ஆட்சியை வழங்க முடியும்;

தொண்டர்களின் பிரச்னைகளைக் கேட்டு கட்சியையும் சிறப்பாக நிர்வகிக்க முடியும். அதனால்தான், பொதுச்செயலாளராக கட்சியினர் அனைவரும் விரும்பித் தேர்வு செய்துள்ள சின்னம்மாவே முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், உங்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை உள்ளது. அதனால்தான், முதல்வராக அவர் நீடிக்கக்கூடாது என்று இப்படிக் கோரிக்கை வைக்கிறீர்களா?

இல்லை. ஊடகங்களால் கிளப்பிவிடப்பட்ட செய்தி அது. அவரும் நானும் பல விஷயங்களை விவாதித்து, கட்சி வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுகிறோம். எங்களுக்குக் கட்சிதான் முக்கியம்.

சின்னம்மாவுக்கு வழிவிட அவரே தயாராக இருக்கிறார். புரட்சித் தலைவி அம்மா மறைந்த 11-ம் நாளிலேயே, ‘கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த சின்னம்மா வரவேண்டும்’ என்று தீர்மானம் போட்ட முதல் மாவட்டமே தேனிதான்.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரவேண்டும் என அ.தி.மு.க-வினர் சிலர் ஊர் ஊருக்குக் கூட்டங்கள் நடத்துகிறார்களே?

கட்சிக்காரர்கள் யாருக்கும் தீபாவைத் தெரியாது. சில ஊடகங்கள் பரபரப்புக்காக அவரை முன்னிறுத்துகின்றன. அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? உண்மையான கட்சிக்காரர்கள் யாரும் அவர் வரவேண்டும் என்று சொல்லவில்லை.

இரண்டு முறை தற்காலிகமாக ‘முதல்வர்’ பதவி வகித்து இருந்தாலும், நீண்ட காலம் முதல்வராகப் பதவி வகிக்கும் வாய்ப்பு முக்குலத்தோர் சமூகத்தினருக்கு ஓ.பி.எஸ் மூலம் இப்போது அமைந்துள்ளது என்றும், அந்த வாய்ப்பை சசிகலா தரப்பு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்றும் சிலர் விமர்சிக்கிறார்களே?

எல்லோரும் தேவர்தான், முக்குலத்தோர்தான். கள்ளர், மறவர் பாகுபாடு எல்லாம் இல்லை. இன்னொரு விஷயம், அ.தி.மு.க-வில் சாதி, மதம் பார்ப்பது இல்லை. எல்லோரும் சமம்தான். அம்மா அப்படித்தான் பார்த்தார்; சின்னம்மாவும் அப்படித்தான் கட்சியினரைப் பார்க்கிறார்கள்.

முதல்வர் பதவிக்கு சசிகலா வந்தால், அவருடைய உறவினர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்ற பேச்சும் உள்ளதே?

உயர்ந்த இடத்தில் ஒருவர் இருந்தால், அவரைத் தேடி உறவினர்கள் வரத்தான் செய்வார்கள். என்னைவிட என் கார் டிரைவருக்கு அதிகமான போன் கால் வரும். என்னைத் தொடர்புகொள்ள முடியாதவர்கள், டிரைவர் மூலம் உதவி கேட்டு வருவார்கள்.

சாதாரண நபரான எனக்கே இப்படி என்றால், புரட்சித் தலைவி அம்மாவுக்கு சகோதரியாக இருந்தவரின் உறவினர்கள், தொழில்துறை மூலம் பெரிய ஆட்களாக வருவது இயல்பான விஷயம்தான். அதையும், கட்சியையும் இணைத்துப் பார்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

சின்னம்மாவின் உறவினர்கள் தனியாக தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சின்னம்மாவோ, புரட்சித்தலைவியைப் போல கட்சிக்காக தன்னைத் தியாகம் செய்துகொண்டு விட்டார்.

அம்மா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை இன்னும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதுதான் சின்னம்மாவின் எண்ணம். எனவே, சின்னம்மா முதல்வராக வரவேண்டும்.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி போட்டியிட்டு வெற்றி பெற்ற தேனி மாவட்டத்தில் சின்னம்மாவும் போட்டியிட்டு சாதனைப் படைக்க வேண்டும். இதுதான் தேனி மாவட்ட மக்களின் விருப்பம்.

சின்னம்மாவுக்காக என்னுடைய ஆண்டிப்பட்டித் தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

- Vikatan

Comments