வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் என்ற நினைப்பும் உணர்வும் எங்கள் ஒவ்வொருவரிடமும் குடிகொண்டிருப்பதை எவரும் மறுதலித்து விட முடியாது.
வடக்கையும் கிழக்கையும் பேரினவாதம் பிரித்துக் கூறினாலும் தமிழ் என்ற உறவால் இரண்டு மாகாணங்களும் இணைந்தேயுள்ளன.
இந்த உண்மையை பேரினவாதிகள் நன்கு அறிந்திருப்பதன் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
இதற்காக தமிழ் - முஸ்லிம் சகோதரர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் தாராளமாக நடந்தேறுகின்றன.
எனினும் தமிழ் மக்கள் தங்கள் தாயகம் வடக்கும் கிழக்கும் இணைந்தது என்பதில் கொண்டிருக்கக் கூடிய உறுதித்தன்மையில்தான் எங்களின் எதிர்காலமும் எங்களுக்கான தீர்வும் அமைந்துள்ளன என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடல் ஆகாது.
யார் எதைக்கூறினாலும் எங்களின் வாழ்விடம்; எங்களின் பண்பாடு; எங்களின் மொழி, எங்களின் கலாசாரம் என்பன தொடர்பில் நாம் கொண்டிருக்கக் கூடிய உறுதித்தன்மைதான் எம் தாய்மொழியாம் தமிழ் மொழியை - தமிழ் இனத்தை வாழவைக்கும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.
தமிழ் மக்கள் தங்கள் இனத்துவத்தை காப்பாற்று வதற்காக அனுபவித்த - அனுபவித்துக்கொண்டு இருக்கக்கூடிய இழப்புகளும் துன்ப துயரங்களும் கொஞ்சமல்ல.
எங்கள் மண்ணில் எங்கள் தாய் மொழியாம் தமிழிற்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களை ஒருகணம் நினைக்கும்போது நெஞ்சம் நெருடிக் கொள்ளும்.
அந்தளவிற்கு எம் இனம் கொன்றொழிக்கப்பட்டது.இந்நிலையிலும் தமிழ் இனத்திற்கு தீர்வு தருவதில் சிங்கள ஆட்சியாளர்கள் பின்னடிக்கின்றனர் எனில் எங்களை அவர்கள் எங்கு வைத்து பார்க்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமன்று.
அரசியலமைப்பு சீர்திருத்தமும் எங்களுக்குரிய தீர்வை தரப்போதில்லை என்பது உறுதியாயிற்று.இருந்தும் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அரசியல் அமைப்பை நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கை சுயநலம் சார்ந்ததே அன்றி தமிழினம் சார்ந்ததல்ல என்பதே உண்மை.இத்தகையதோர் நிலைமையில் எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடைபெற இருக்கின்றது.
சாத்வீகமான முறையில்; அகிம்சை வழியில்; ஜனநாயக பண்போடு கிழக்கின் மட்டக்களப்பு மண்ணில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் தமிழ் மக்கள் அணி திரண்டு தமது உணர்வை, ஆதரவை வெளிப்படுத்துவது கட்டாயமானதாகும்.
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற உண்மையை எடுத்துரைப்பதற்கும் எமக்கு வழங்கப்படுகின்ற தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்குமான அகிம்சைப் பேரணியாக இவ் எழுக தமிழ் எழுச்சி அமைய வேண்டும்.
இதற்கு எங்கள் முஸ்லிம் சகோதரர்களும் கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்களும் தங்கள் தார்மிக ஒத்துழைப்பை வழங்குவது நீதியின் பாற்பட்டதாகும்.
எல்லாவற்றிற் கும் மேலாக அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அமைப்புகளும் பொதுமக்களுமாக திரண்டு எங்களின் உணர்வை நல்லாட்சிக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்த கிழக்கில் எழும் எழுக தமிழில் அணிதிரள வேண்டும்.
- Valampuri