வாகன விபத்துக்கள் காரணமாக மூளை சாவு அடைதல் மற்றும் இரத்த ஓட்ட கட்டமைப்பு செயலிழப்பதன் காரணமாக மரணமடையும் சாரதிகளின் உடல் உறுப்புகளை, தேவையான நோயாளிகளுக்கு பொருத்த அவற்றை தானம் செய்ய சாரதிகளின் விருப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும் வகையில் சாரதி அனுமதிப்பத்திரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தமது உடல் உறுப்புக்களை தானம் செய்ய விரும்பும் சாரதிகள் தமது விருப்பத்தை தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் சாரதிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வகையில் மாற்றங்களை செய்துக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம் மற்றும் போஷாக்கு அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.