மெரீனா கடற்கரையில் நடந்து கொண்டிருப்பது என்ன? நெகிழ வைத்த தமிழக இளைஞர்கள்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வழமையாக அந்தக் கடற்கரை அமைதியாகத் தான் இருக்கும். சில காதலர்களின் கூடுகையாகவும், பொழுதுபோக்குத்தளமாகவும் இருக்கும் மெரீனா.

மெரீனா கடற்கரைக்கு என்று ஒரு அடையாளம் உண்டு. மெரீனாவில் கால் பதித்து வெறுமையாக நின்ற பலர் இன்று தமிழகத்தில் பெரிய இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

வறுமைப்பட்டவர்களை வளர்த்துவிட்ட ஒரு தாயாக இருக்கிறாள் மெரீனா கடற்கரை.

அந்தக் கடற்கரையில் இன்று அரசியல் தலைவர்கள் சிலரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நேற்றும் இன்றும் மெரீனா அன்னையின் மடியில் நடந்து கொண்டிருப்பது என்ன?

இதுநாள் வரை மெரீனா கடற்கரையில் கூடிய கூட்டம் சாதாரணமானதாக இருக்கலாம்.

ஆனால், நேற்று முன்தினம் வெகுசாதாரணமாக இருந்த கடற்கரை இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது.

தன் அலைகளை எப்பொழுதும் அடக்காமல் இருக்கும் கடலின் அலையைப் போல திரண்டு வெகுண்டு எழுந்திருக்கிறார்கள் தமிழக மாணவர்களும், இளைஞர்களும்.

மெரீனா கடற்கரைக்கு இன்று சென்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு சென்னைக் கடற்கரைச்சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் இளைஞர்கள் படையெடுத்திருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களைப் பார்த்து வேடிக்கைக்கும், பொழுது போக்கிற்குமாக நேரத்தை வீணடிக்கிறார்கள் மாணவர்கள் என்று வந்தனர்.

ஆனால், அதே சமூகவலைத்தளங்களின் மூலமாக இன்று இவ்வளவு கூட்டம் மூடியிருக்கிறது. இது ஒன்றும் சினிமா நடிகனுக்காகவோ, கிரிக்கெட் விளையாட்டுக்காகவோ கூடிய கூட்டமல்ல.

மாறாக தமிழனின் அடையாளத்தை அழிக்கும் அந்நிய சக்திகளுக்கு எதிராக கிளர்ந்த படை.

நமது இளைஞர்களா இப்படி அழகாக அரசியல் பேசுகிறார்கள்? நமது மாணவர்களாக அரசியல் விழிப்படைந்தனர்? நமது பெண்களா இப்படி வீதிக்கு இறங்கினர் என்று மெய் சிலிர்க்க வைக்கிறது மெரீனா கடற்கரை.

நேற்று காலை அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும் மெரீனா கடற்கரையில் நேற்றுக்காலை மாணவர்கள் இளைஞர்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

எனினும் போராட்டம் இரவிரவாக தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் சமூகவலைத்தளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் என்று வேகமாக தகவல்கள் பறந்தன.

நாளை கல்லூரிகளுக்கு எவரும் செல்லக்கூடாது. எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். தமிழன் என்றால் எப்படிப்பட்டவன் என்பதை நிரூபிப்போம் போன்ற செய்திகள் அனைத்து மாணவர்களிடத்திலும் சென்றடைந்தன.

இந்நிலையில் இன்று காலை எவருமே எதிர்பாராத அளவிற்கு மெரீனா கடற்கரை முழுவதும் மாணவர்களால் நிரம்பி வழிகிறது.

போராட்டத்தில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு இது மிகப்பெரியதொரு உற்சாகத்தை கொடுத்தது.

இந்தக் கூட்டத்தை நிச்சயம் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அங்கே கூடிய மாணவர்கள் எழுப்பும் கோசங்கள் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கான அறைகூவலாகவே நோக்கவேண்டியிருக்கிறது.

வெறுமனமே தமிழகத்தில் இன்று ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக பார்க்க முடியாது. ஏனெனில் மாணவர்கள், இளைஞர்கள் பேசும் அரசியல் அதையும் தாண்டியதாகவே இருக்கின்றன.

“மோடி அரசு எமக்கு வேண்டாம்.” தமிழன் என்றால் உனக்கு இலக்காரமா? வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, தமிழக மக்கள் கண்ணீர் எங்கே போனாய் பன்னீர்?

பாரதி மனைவி கண்ணம்மா எங்கே போனாய் சின்னம்மா? போன்ற கோசங்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருக்கின்றன.

மெரீனாக் கடற்கரையில் கடல் அலையின் இரைச்சலைக்காட்டிலும் மாணவர்களின் கோசங்களே விண்ணைத் தொடுகின்றன.

தமிழகத்தில் இந்த எழுச்சி ஏற்படும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு இந்தப் போராட்டம் சமூக மயப்படுத்தப்பட்டுவிட்டது.

ஜல்லிக்கட்டு ஒரு ஆரம்பம் தான். ஈழ விடுதலைப் போராட்டத்தின் விதை நல்லூரில் ஆரம்பித்தது. தமிழகத்தில் உரிமை மீட்பிற்கான விதை அலங்காநல்லூரில் முளைவிட்டிருக்கிறது.

தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இனி ஏமாற்றுவதற்கும் இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கும் அவர்கள் விடமாட்டார்கள்.

செய் அல்லது செத்துமடி என்பதை தாரக மந்திரமாக கொண்டிருக்கின்றான் தமிழன். அது இரத்தத்தில் உரைந்துவிட்டது. அழிக்க நினைத்தால் எதிர்த்து நிற்பான் தமிழன்.

தமிழக இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.

Comments