நாமல் ராஜபக்ச போன்று பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்படுவாரா?

Report Print Steephen Steephen in அரசியல்
97Shares

விஷமற்ற உணவை மக்களுக்கு வழங்க கொண்டு வந்த அரசாங்கம், இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை பூஜ்ஜியமாக்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ கூட்டுறவு மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், மக்களுக்கு செடிக்கொடிகளை உண்ண செய்த காரணத்தினாலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் அரசாங்கத்தில் இருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியை கொண்டு சென்றவர்களில் சிலருக்கு தற்போது நல்லாட்சி விஷ ஆட்சியாக மாறியுள்ளதால், சரியான வழிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செங்கற்கள் தற்போது ஒவ்வொன்றாக கழன்று வருகின்றது. நீண்டகாலம் செல்லும் முன்னர் அரசாங்கம் உடைந்து சிதறும் என்பது நிச்சயம்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவே அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்திற்கு அழைத்த வீரவங்சவை அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளது.

நாட்டுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள பெரிய திருடர்கள் சுதந்திரமாக இருக்கும் போது நாட்டுக்காக குரல் கொடுத்த விமல் வீரவங்சவை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைத்து வீரவங்சவின் குரலை அடக்க முடியாது.

எதிர்வரும் 22 ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணியின் 22வது மாநாடு நடைபெறவுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொடையில் புரட்சியின் ஆரம்பம் என்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டங்களில் வீரவங்சவின் குரலை அடக்கவே நல்லாட்சி அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அடுத்த சில தினங்களில் நாமல் ராஜபக்சவை போல் எனக்கும் சிறைச் செல்ல நேரிடும்.

எங்களை சிறையில் அடைத்தாலும் எமது கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் வெள்ளத்தை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்த முடியாது.

அத்துடன் நாளுக்கு நாள் பெருகி வரும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் வெள்ளத்தை எவராலும் திருப்பி விட முடியாது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments