இரவிலும் கொதிக்கும் தமிழகம்..! டெல்லி பறக்கும் பன்னீர்..! எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
1040Shares

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுடெல்லிக்கான பயணத்தினை நாளைய தினம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் எதிரொலி முதலமைச்சரின் இந்த நேரடிப்பயணம் அமைந்திருப்பது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சி அலைகள் தன்னெழுச்சியாக நடந்துகொண்டிருக்கிறது.

மாணவர்கள், இளைஞர்கள் வேறொரு நபரின் துணையில்லாமல் தாங்களே போராட்ட வடிவங்களை ஒருங்கமைத்தனர். இன்று சென்னை கடற்கரைச்சாலை ஸ்தம்பிக்கும் அளவிற்கு மாணவர்களால் நிரம்பிக் காணப்பட்டது.

மத்திய, மாநில அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் இறங்கி வந்தது போன்றே தெரிகின்றது.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் முதலமைச்சர் ஒரு அறிக்கை அல்லது தங்களை நேரில் வந்து பேசவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

ஆனால், அதற்கு ஒருபடி மேல்சென்ற முதலமைச்சர், நேரடியாக டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் அவசரச்சட்டம் கொண்டுவர வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

இன்று இரவு 12.30 மணிக்கு டெல்லி புறப்படுவதாக அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். ஆனால், நாளை டெல்லி அரசாங்கம் இதுகுறித்து ஓபிஎஸ் இற்கு என்ன பதில் கொடுக்கும் என்பதை வைத்தே தமிழகத்தின் நிலை தீர்மானிக்கப்படும்.

ஒருவேளை பன்னீர்செல்வம் நாளை வெருங்கையோடு திரும்புவாராயின் தமிழகத்தின் நிலைமையை சொல்லில் விளக்க முடியாமல் போகும்.

ஏனெனில் மத்திய அரசாங்கத்தின் மீது தமிழக இளைஞர்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள். மாணவர்களின் கோசங்களில் வெளிப்பட்ட இன்னொரு விடையத்தை இங்கே கவனிக்க வேண்டும்,

எம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அழித்தால் தமிழ் நாடு இந்தியாவோடு இருக்காது என்று உரத்த குரலில் கோசமிடுகின்றார்கள்.

ஆக, நாளைய தினம் மதியம் தமிழகத்தின் நிலையும் அடுத்த கட்டபோராட்டம் எப்படி அமையும் என்பது பற்றியும் பன்னீர் சொல்லும் அந்த வார்த்தையில் தான் இருக்கிறது.

கொதித்துக்கொண்டிருக்கும் இளைஞர் படையை மோடி அரசு சமாளிக்குமா? அல்லது போராட்டத்தை வீரியம் கொள்ளச்செய்யுமா..? என்பதற்கு நாளை வரை காத்திருக்க வேண்டும்.

தமிழக இளைஞர்களின் இந்த விழிப்பில் பாலை வார்ப்பார்களா? அல்லது பெற்றோல் ஊற்றுவார்களா தெரியாது.

ஆனால் ஜல்லிக்கட்டிற்கு பாதகமான முடிவோடு முதலமைச்சர் பன்னீர் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்புவாராயின் தமிழகத்தில் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்.

எல்லா விளைவுகளையும் இந்திய அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தமிழர்கள், இளைஞர்கள் இந்தளவிற்கு விழிப்படைந்ததற்கு சமூக வலைத்தளங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

நாளை பொறுத்திருந்து பார்க்கலாம். ஜல்லிக்கட்டா? இல்லை டெல்லிக்கட்டா? என்பதை.

Comments