லங்கா ஈ நியூஸ் ஆசிரியருக்கு அறிவிப்பாணை விடுத்தது உயர்நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அரசியல்
53Shares

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவுக்கு உயர்நீதிமன்றம் அறிவிப்பாணை விடுத்துள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட சில செய்திகள் மூலம் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி சட்டத்தரணியான மதுர வித்தானகே தாக்கல் செய்த 14 மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் மனுக்கள் ஆராயப்பட்டன. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பிரதிவாதிக்கு அழைப்பாணை விடுப்பது அவசியம் என நீதியரசர் பியசாத் டெப் தெரிவித்தார்.

இதனடிப்படையில், மனுக்கள் சம்பந்தமாக மார்ச் மாதம் 3 ஆம் திகதி விளக்கமளிக்குமாறு லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவின் மாலபே இல்லத்திற்கு அறிவிப்பாணை அனுப்புமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார, சந்தருவான் சேனாதீரவை கைது செய்யுமாறு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இண்டர்போல் பிடியாணையை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படத்தை அடையாள அணிவகுப்புக்கு முன்னர், இணையத்தளத்தில் பிரசுரித்து நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் மூலம் சில நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டதாக கூறி சட்டத்தரணி மயூர வித்தானகே கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 14 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடும் லங்கா ஈ நியூஸ் சம்பந்தமாக விசாரணை நடத்தி தகுந்த தண்டனையை வழங்குமாறு வித்தானகே உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த நவம்பர் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சில இணையத்தளங்கள் ஊடாக பொய் பிரசாங்களும், அடிப்படைவாத கருத்துக்களையும் வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்தப்படுவதாக கூறியிருந்தார்.

நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வரும் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை சர்வதேச பொலிஸார் மூலமாக கைது செய்து, இலங்கைக்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Comments