ஆட்சியை தீர்மானிக்கும் ஆயுதம்..! விடுதலைப்புலிகளின் உதவியை நாடும் மைத்திரி?

Report Print Mawali Analan in அரசியல்
1873Shares

ஆரம்ப காலம் முதல் இலங்கையில் அரசியலை நிர்ணயித்தவர்கள் விடுதலைப்புலிகளே என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

விடுதலைப்புலிகளையும் அவர்களின் ஆயுதங்களையும் காரணம் காட்டியே ஆட்சிகளும் அதிகாரங்களும் மாறி மாறி தொடர்ந்து வந்தன.

ஆரம்ப கால கட்டம் முதல் விடுதலைப் புலிகளை முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் பயம் தோற்று விக்கப்பட்டது.

அந்த பயத்தினை பயன் படுத்தி “நான் விடுதலைப் புலிகளை அழிக்கின்றேன், யுத்தத்தை நான் நிறுத்தி வைக்கின்றேன்.,

யுத்தம் காரணமாகவே நாட்டில் அபிவிருத்தி இல்லை” இவ்வாறு பல விடயங்களை முன்னிலைப் படுத்தியே தேர்தல் வாக்குறுதிகளும் பிறப்பிக்கப்பட்டன.

வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர் அரசியல் வாதிகள் வெற்றியும் பெற்றனர். தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன, அதிகாரங்கள் மாற்றம் பெற்றன.

இங்கு தமிழ்மக்களின் போராட்டம் மட்டும் தீர்க்கப்பட வில்லை. அதனை தீர்த்து இருந்தால் உரிமைப் போராட்டம் ஆயுதம் வரை சென்று இருக்காது.

அப்படி பார்க்கும் போது அப்போது முதல் இப்போது வரை தமிழர்களின் போராட்டத்திற்கு இலங்கை அரசுகளும் வழி சமைத்து கொடுத்துக் கொண்டே வந்துள்ளது.

காரணம் இருக்கத் தான் செய்தது அதாவது தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட்டு விட்டால். தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படாது என்பதே.

இலங்கையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினையே இப்போது வரை ஆட்சிகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இது பலதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமே.

மற்றொரு பக்கம் இது தெரிந்த கதைகள் மட்டுமல்ல புளித்துப் போன வாதமாகி போய்விட்டது.

அந்தவகையில் புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னரும் இன்று வரை புலிகளின் பேச்சை அரசியல் தலைவர்கள் நிறுத்தவில்லை. "பிரபாகரன்.. பிரபாகரன்" என கூச்சலிடும் அரசியல் தலைவர்களே அதிகம் இங்கு. அவர்கள் அதன் மூலம் சாதித்து கொள்ள நினைப்பது.,

அதிகாரத்தை, பதவியை செல்வாக்கை பணத்தை. இலங்கை அரசியல் வாதிகளுக்கு பணம் எந்தளவு முக்கியமோ அதே அளவு பிரபாகரனும் முக்கியம் தான்.

அனைவரையும் தாண்டி தற்போதைய ஜனாதிபதியும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் அதற்காகவே நாம் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வருகின்றோம் என்பதோடு அடிக்கடி விடுதலைப் புலிகளின் பெயர்களை உச்சரித்து வருகின்றார்.

அந்த வகையில் அவரும் யுத்தத்தையும், புலிகளையும் காரணம் காட்டத் தொடங்கி விட்டாரா? ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள புலிகளின் உதவியை நாடுகின்றாரா என்ற சந்தேகம் வலுக்கின்றது.

இதன்படி பழைய கதையே மீண்டும் தொடருகின்றது. ஒரு காலகட்டத்தில் புலிகளை வைத்து தேர்தல் வாக்குகள் பெறப்பட்டன மீண்டும் அதே பாதைக்கு இலங்கை பயணிக்கத் தொடங்கி விட்டதா? என்ற வகை பார்வையும் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக மீண்டும் விடுதலைப்புலிகள் என்ற கருத்தே அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

ஓர் உரிமைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டமாக மாற்றியதும் இலங்கை அரசுகளே, பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று அழித்ததும் அரசுகளே.

தமிழர்கள், சிங்களவர்கள் என ஓர் மாயப் பிரிவனையைத் தோற்று வித்து அதனை அரசியல் இலாபமாக மாற்றி கொண்டு வருவதால் தான் யுத்தம் தொடர்ந்தது. அதிகார அரசியல் மோகத்திற்கு பலியானது அப்பாவி உயிர்கள் மட்டுமே.

உயிர்கள் அழிந்தன இனியாவது அதனை விடுத்து விடுதலைப்புலிகளின் உதவி இல்லாமல், தமிழர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபங்களைப் பெற்றுக் கொள்ள நினைக்கா விட்டால் இலங்கை அமைதியான நாடாக மாற்றம் பெறும்.

நாட்டு மக்கள் என்ற பார்வையில் உரிமையும் சுதந்திரத்தையும் கொடுக்காவிட்டால் இலங்கை இருக்கப்போவது அதே இடத்தில் தான்.

பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் அந்த அந்த இனத்திற்கு சுதந்திரம் உண்டு என ஜனாதிபதி பேச்சளவில் மட்டும் சொன்னால் போதாது செயற்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறெனினும் அரசியலில் விடுதலைப்புலிகளை ஓர் ஆயுதமாக பார்க்காமல் அரசுகளும் ஆட்சிகளும் செயற்பட்டால் மாத்திரமே உண்மையான நல்லிணக்க தேசமாக இலங்கை மாறும் என்பது மறுக்க முடியாது.

Comments