இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு இந்தியா பல்வேறு அழுத்தங்களை கொடுத்ததாக அன்றைய புனர்வாழ்வு அமைச்சின் செயலாளரும் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநருமான ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வடக்கில் விமானம் மூலம் இந்தியா உணவுப் பொதிகளை போட்டது. இந்தியா இலங்கையின் வான் எல்லைக்குள் அத்துமீறியது. அதற்கு சில தினங்களுக்கு பின்னரும் அதே அச்சுறுத்தல் காணப்பட்டது.
நாங்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று திரும்பும் நேரத்தில், பலாலி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்தோம் எங்களை அனுப்பவில்லை.
இது குறித்து நான் எனது நண்பர் டென்சில் கொப்பேகடுவிடம் கேட்டேன். இந்தியாவின் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக வானில் நாம் செல்ல முடியாது எனக் கூறினார்.
இந்திய அமைதிப்படையினர் திருகோணமலை சீனன்குடா துறைமுக போதிராஜாராமய விகாரதிபதி ரம்புக்கன சத்தலங்கார தேரரை கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின.
எனினும் இதனை இலங்கைக்கான அன்றைய இந்திய தூதுவர் கே.என். டிக்ஷித் மறுத்தார். இது குறித்து நாங்கள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.
அப்போது அவர் நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருந்தாரா என்பது சந்தேகம் என ஒஸ்டின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விகாரதிபதி இந்திய படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தற்போதைய விகாரதிபதி தெய்யோவிட்ட பியதிஸ்ஸ கருத்து வெளியிடுகையில்,
இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் அமைதிப்படையாக முதலில் தமிழகத்தில் இருந்தே இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 5 நாட்களில் சிங்களவர்களை அடித்து விரட்டினர்.
சிலரை கொலை செய்தனர். ஹபரணைக்கு அப்பால் வர அனுமதிக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்க அதிபரும் மக்களுக்கு எப்படி பாதுகாப்பை வழங்குவது என்று செய்வதறியாது இருந்தார்.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஒரு நிபந்தனைக்கு அமைய இராணுவத்தினரும் பொலிஸாரும் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் எமது பெரிய பிக்கு அவர்களை எதிர்கொண்டார்.
இதன் காரணமாக இந்திய அமைதிப்படையினர் விகாரதிபதியை சுட்டுக்கொன்றனர் என சத்தலங்கார தேரர் குறிப்பிட்டுள்ளார்.