பாதுகாப்பான சேவை வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : பா.டெனிஸ்வரன்

Report Print Thileepan Thileepan in அரசியல்
101Shares

உருவபொம்மை எரிப்பதனால் அநீதி நீதியாகிவிடாது. ஆகவே பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு முன்வாருங்கள். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவை வழங்குவதென்பது மிகுந்த சவாலுக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சீர்செய்வது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

எமது மாகாணத்தில் தினந்தோறும் ஏதோ ஓர் மூலையில் வீதி விபத்தால் மக்களது பெறுமதிமிக்க உயிர்கள் வீணாக பறிக்கப்படுவதும், பலர் நிரந்தர மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்படுவதும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தரப்பினர்கள் வீதி ஒழுங்குகளை ஒழுங்காக பின்பற்றாது நடப்பதும், மேலும் போக்குவரத்து சேவையை வழங்கும் தரப்பினருக்கிடையில் காணப்படுகின்ற கண்மூடித்தனமான போட்டித்தன்மையும், ஓர் சீரான இணைந்த நேர அட்டவணையை பின்பற்றாமையும், வீதியில் பயணிக்கின்ற ஒரு சில பொதுமக்களின் அசமந்தப்போக்கும் முக்கிய காரணங்களாக காணப்படுகிறது.

பச்சிளம் சிறார்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் மீண்டும் வீடு வந்து சேருவார்களா? என்று ஏங்கும் அளவிற்கு வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றது.

இதற்க்கு எதிராக எத்தகைய எதிர்ப்புவந்தாலும், அதனைத் தாண்டிச் சென்று நீதியை நிலைநாட்டுவது எனது கடமை என்பதை நான் நன்கு அறிவேன்.

அந்த வகையில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு எனது பொதுமக்கள் பக்கபலமாக இருக்கவேண்டும்.

இன்று அடுத்தவர் உயிர் தானே போகின்றது என அசமந்தமாக இருப்போமெனில் நாளை நாமோ அல்லது நமது பிள்ளைகளோ இதனை சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேரூந்து நிலையம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீ பாலடிசில்வாவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையினர் ஆகிய இரண்டு தரப்பினரையும் குறித்த புதிய பேரூந்து நிலையத்தில் இருந்தே தமது சேவைகளை வழங்கவேண்டும் என அன்றைய தினமே சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அச்சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் நான் கூறியிருந்த விடயம், இணைந்த நேர அட்டவணை தற்போது தயாராக உள்ளது அதனை அமுல்படுத்துகின்ற போது அதற்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

இச் செய்தி பிழையாக திரிபுபடுத்தப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர்களுக்கு கூறப்பட்டுள்ளதாக தற்போது அறியமுடிகின்றது.

போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்தும்போது அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கமுடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நன்கு உணர்ந்துக் கொள்ளவேண்டும்.

மேலும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சாரதி நடத்துனர்கள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும். இது எமது பிள்ளைகள், எமது மக்கள் என்பதை உணர்ந்து இவர்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவது எமது கடமையாகும்.

மேலும் உருவபொம்மை எரிப்பதனால் அநீதி நீதியாகிவிடாது. நீதி அநீதியாகிவிடாது.

ஆகவே பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு முன்வாருங்கள். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

Comments