சட்டமா அதிபரை நீதிமன்றத்திற்கு இழுத்த விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்
100Shares

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உட்பட சில தரப்பினரை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான வாதங்களை முன்வைப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.ஏ. களுவாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு 9 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி வீரவங்ச மேல் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற போதிலும் வீரவங்ச சம்பந்தமாக சான்றிதழ் தாக்கல் செய்யப்படாமல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வீரவங்சவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

Comments