மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், டில்லியில் ஒரே நாளில் மூன்று ஹோட்டல்களில் தங்கியதாக குறிப்பிட்டு, 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா செலுத்தியுள்ளததாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோதே, ஒரே நாளில் மூன்று ஹோட்டல்களில் தங்கியதற்கான பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை டுபாய் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குறிப்பிட்டு 5 இலட்சத்து 42 ஆயிரம் ரூபா செலுத்தியதாக பற்றுச்சீட்டை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த பயணத்துக்காக ஏப்ரல் 12 ஆம் திகதி மாலையே அர்ஜுன் மகேந்திரன் டுபாய் சென்றுள்ளதாகவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.