அந்நியர்கள் வருவதற்கு முன்பிருந்த நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்!

Report Print Kumar in அரசியல்

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்பாக நாங்கள் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையிலே புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் இந்த நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்துவெளிவரும் தென்றல் சஞ்சிகையில் 32வது இதழின் அறிமுக நிகழ்வும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.

கல்லடி புதிய கல்முனை வீதியில் உள்ள தென்றல் அலுவலகத்தின் முன்பாக தென்றல் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டினுடைய தலைவதி தற்போது பாராளுமன்றத்தில் எழுதப்பட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நல்லாட்சி நடைபெறுகின்றது.எங்களுக்கு பிரச்சினைகள் இல்லையென நாங்கள் நினைத்துக்கொண்டுள்ளோம்.

இது நீடிக்கவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் நடைபெறும் அரசியலமைப்பு உருவாக்கம் என்பது சரியான முறையில் முடிவுபெறவேண்டும்.

கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் போன்று எதிர்காலத்தில் எமது பிள்ளைகளுக்கு நடைபெறாத வகையில் வளர்க்கப்படவேண்டும் என்றால் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.

இது தொடர்பில் பல்வேறு விதமான கோணங்களில் பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நாட்டை அந்நியர்கள் அடிமைப்படுத்தியதன் பின்னர் இந்த நாட்டை விட்டுச்சென்றுவிட்டார்கள். ஆனால் அந்த அந்நியர்கள் போட்ட கட்டுகளுக்குள் நாங்கள் இன்னும் இருக்கின்றோம்.

அவ்வாறான ஒரு கட்டுத்தான் ஒற்றையாட்சி என்ற கட்டு.ஒற்றையாட்சி என்ற கட்டுக்குள் இருந்துகொண்டு நாங்கள் சிந்திக்கும் நிலையில் இந்த நாட்டுக்கு விமோசனமான அரசியலமைப்பு சட்டத்தினை பற்றி உருவாக்கமுடியாது.

அந்நியர் ஆட்சிக்கு முன்னர் இந்தியாவில் ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் கடந்த காலத்தில் ஒவ்வொரு நாடாக இருந்தனர்.தங்களுக்கென்று ஒரு ஆட்சியுடன் இருந்தார்கள்.

அந்நியர்கள் போனதன் பின்னர் அந்த ஆட்சியை மீள கொண்டுவந்தார்கள்.மொழி ரீதியான மாநிலங்களை உருவாக்கினார்கள்.பழமையினை அவர்கள் மீளவும் கொண்டுவந்தார்கள்.

இலங்கையில் ராசரட்டை,மாயரட்டை,உறுகுணரட்டை என்று மூன்று அரசியல் பிரிவுகள் தென் பகுதியில் இருந்தன.

வடகிழக்கு இணைந்த ஒரு மாநிலம் இருந்தது.இந்த மாநிலத்தை மீள்வித்து புனரமைக்கின்ற ஒரு செயற்பாட்டினை நோக்கி அரசாங்கமும் அரசியல்வாதிகளும் செல்வார்களானால் வடகிழக்கு இணைப்பு பிரச்சினையென்பது என்பது பிரச்சினையில்லாமல் தீர்க்கப்படும்.

சிங்கள மக்கள் இது தொடர்பில் வேறுவிதமாக சிந்திக்கமுடியாத நிலைமையேற்படும்.அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்பாக நாங்கள் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையிலே புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் இந்த நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும்.

அவ்வாறான நிலையேற்படுவதற்கு உங்களது கருத்துகளை நீங்கள் வழங்கவேண்டும்.முகப்புத்தகங்கள் ஊடாக அவ்வாறான செய்திகளை பரிமாறிக்கொள்ளுங்கள்.இந்த செய்திகள் முஸ்லிம் நண்பர்கள்,சிங்கள நண்பர்களுக்கு சென்றடையக்கூடியதாக செய்யுங்கள்.

வடகிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம் மக்கள் அச்சமடைகின்றனர். அது தொடர்பில் அச்சமடையவேண்டிய அவசியம் இல்லை.

அதிகாரப்பரவலாக்கல் மூலம் சுயாட்சி ஒன்றுகிடைக்கும்பொழுது வடகிழக்கில் வாழும் மூவின மக்களும் அதனை பகிர்ந்துகொள்ளமுடியும்.நாங்கள் இணைந்துவாழ்வதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.

கடந்த காலத்தில் எமது மக்கள் பீதியுடனேயே வாழ்ந்துவந்தனர்.அவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறக்கூடாது என்பது எங்கள் பிரார்த்தனையாக இருக்கவேண்டும் என்றார்.

Comments