சசிகலா பிணையில் வெளியே வர முடியாது! வக்கீல் ஆச்சார்யா அதிரடி

Report Print Samy in அரசியல்
276Shares

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, 2004-ம் ஆண்டில் பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, இந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக இருந்து சிறப்பாக வாதிட்டு வந்தவர் பி.வி.ஆச்சார்யா.

ஜெ. தரப்பினர் ஏற்படுத்திய மன உளைச்சலைத் தாண்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, இந்த வழக்கில் நீதி கிடைக்கக் காரணமாக இருந்தார்.

பெங்களூரு வசந்த நகரில் உள்ள வீட்டில், அவரிடம் பேசியதிலிருந்து...

வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தருணத்தில் எப்படி உணர்கிறீர்கள்?

இந்தத் தீர்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடையவில்லை. இவ்வளவு நாட்கள் உழைத்ததற்குக் கிடைத்தத் தீர்ப்பாக எண்ணி மன திருப்தி அடைகிறேன். நீதிமன்றம் மக்களுக்காகத் தன் கடமையைச் செய்திருக்கிறது. இதற்காகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடக் கூடாது.

எவ்வளவு அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், தவறு செய்தால் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை ஊழல் செய்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஊழல் புரியும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்கித் தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்ற பாடத்தைப் புகட்டி இருக்கிறது.

இந்தத் தீர்ப்பால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்வதற்குப் பயப்படுவார்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், 21 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா மறைந்த பிறகு தானே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது?

நீங்கள் கேட்பது உண்மைதான். ஆனால், அதை உச்ச நீதிமன்றம்தான் தீர்மானித்தது.

இந்த வழக்கு வெற்றிபெற நீங்கள் வைத்த முக்கிய வாதங்கள் என்னென்ன?

வருமானத்துக்கு அதிகமாக குற்றவாளிகள் ரூ. 66.65 கோடி சேர்த்தார்கள் என்பது வழக்கு. இது கீழ் நீதிமன்றத்தில் உறுதியானது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பில், ‘வருமானத்துக்கு அதிகமாக இவர்கள் ரூ.2.82 கோடி மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதத்துக்குள் சொத்து சேர்த்திருந்தால் மன்னிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.

அப்படிப் பார்த்தால் இவர்கள் சேர்த்தது 8.12 சதவிகிதம்தான் அதிகம்’ என்று சொல்லி, மன்னித்து விடுதலை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி, மொத்த வருமானத்தைக் கணக்கிடும்போது கணிதப்பிழை செய்திருந்தார். அவர் போட்ட கணக்கை சரி செய்தாலே, ரூ.21 கோடி அதிகமாக சொத்து சேர்த்ததாக வருகிறது. இதனால், வருமானத்துக்கு அதிகமாக 76.7 சதவிகிதம் சொத்து சேர்த்திருக்கிறார்கள் எனக் கண்டறிந்திருக்கலாம்.

இந்த ஒன்றே போதும் இவர்கள் தண்டனை பெறுவதற்கு.தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, குற்றவாளிகளுக்குச் சொந்தமான கட்டடங்களை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து, ரூ.27 கோடி என்று மதிப்பீடு செய்தது.

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அதைக் கருத்தில் கொள்ளாமல், இவராக ரூ.5 கோடி என்று மதிப்பீடு செய்தது தவறு.

‘குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். நான்கு பேரின் வங்கிக் கணக்குகளில் தொடர்ந்து பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. நான்கு பேரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்’ என்று வாதிட்டோம். இதைக் குமாரசாமிகூட ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் கூடுதல் கட்டடம் கட்டுகிறார். அதற்கு, எந்த வருமானமும் இல்லாமல் தன் வீட்டில் இருந்த சசிகலாவிடம் ரூ.2 கோடி கடன் வாங்கியதாகச் சொல்கிறார். இதை யாராவது நம்புவார்களா?

இவைதான் உச்ச நீதிமன்றத்தில் எங்களால் உறுதியான வாதங்களாக எடுத்து வைக்கப் பட்டன.

இவ்வளவு முக்கியமான வழக்கில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கவனக் குறைவாக தீர்ப்பு வழங்கலாமா?

(சிரித்துக் கொண்டே...) ‘‘இது பற்றி நான் பேச விரும்பவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் செய்த கணிதப் பிழையை மட்டும் அகற்றி விட்டால், மூன்று நீதிமன்றத் தீர்ப்புகளும் சமமாக இருந்திருக்கும். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் இவர்கள் தண்டிக்கப் பட்டிருப்பார்கள்.

மறு சீராய்வு மனு மூலம் குற்றவாளிகளுக்குப் பயன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

குற்றவாளிகள் தரப்பு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், அதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. அதை நீதிபதிகளும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

குற்றவாளிகள் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

வழக்கு முடிந்து விட்டதால் பிணை என்ற பேச்சுக்கே இடமில்லை. பரோலில் வரலாம். அதுவும் சாதாரண பரோலில் வருவதற்குக்கூட ஆறு மாதங்கள் சிறையில் இருந்த பிறகே அனுமதி கிடைக்கும்.

மோசமான உடல்நிலை காரணமாகவோ... அல்லது குற்றவாளிகளின் இரத்த உறவினர்கள் மரணம் அடைந்தாலோ மட்டும் தான் வெளியில் செல்ல அனுமதிப்பார்கள். பெரும்பாலும் அனுமதிப்பது கடினம்.

- Vikatan

Comments