இலங்கையை போதையற்ற நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார், ஆனால் அவரால் 25 மதுபான விற்பனை நிலையங்களை கூட மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமாகாண சபையின் 85ஆவது அமர்வு நேற்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து,
தென்னிலங்கையில் இருந்து கல் வகைகளை வடக்கிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றார்கள்.
அவ்வாறான விற்பனைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இலங்கையை போதையற்ற நாடாக மாற்றுவதற்கு பல திட்டங்களை வகுத்துள்ள ஜனாதிபதி மேடைப் பேச்சுக்களிலேயே மதுபான விற்பனை அதிகரித்துள்ளது, அவற்றினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிக்கொண்டு வருகின்றார்.
மேடைப்பேச்சுக்களாக மட்டும் இல்லாமல் குறைந்தது 25 மதுபானசாலைகளை மூடுவதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மது ஒழிப்பினை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பதை நிறுத்திஅதிகமாகவுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.