வடக்கில் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் : சந்திரிக்காவின் கருத்து ஐ.நாவிற்கு கிடைத்த மற்றுமொரு சான்று?

Report Print Vino in அரசியல்
70Shares

வடக்கிலுள்ள இராணுவத்தினர், அங்குள்ள பெண்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கிவருவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தானது மனித உரிமைகள் பேரவை இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டிற்கு நல்ல சான்றாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,

நாட்டின் படையினர், அரச அதிகாரிகள் ஆகியோரால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்துக்கு தலைமை தாங்கும் சந்திரிகா குமாரதுங்கவால் வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கருத்துகள், பாரதூரமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இது இலங்கைப் படையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுமெனவும் எச்சரித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றன. இவற்றிலிருந்து தம்மைத் தாமே இராணுவத்தினர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“பாரதூரமான குற்றச்சாட்டுகள், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டபோது, அப்போதைய வெளிவிவகார அமைச்சரான நான் அரசாங்கத்தின் சார்பில் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தேன்.

ஆனால் இன்று, இக்குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது, ஆனால் குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது. இந்த கருத்து தொடர்பில், அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த சந்திரிகாவின் கருத்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தினூடாக, பாதுகாப்புப் படைகள் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்த நல்ல சான்றாக சர்வதேச சமூகத்தால் பயன்படுத்தப்படும் எனவும் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

Comments