விடுதலைப்புலிகளை அழித்தது எவ்வாறு? மகிந்தவும் கோத்தபாயவும் கூறும் தகவல்

Report Print Mawali Analan in அரசியல்
1838Shares

நாம் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை, புலிகளை அழிப்பது மட்டுமே இலக்காக கொண்டு யுத்தம் செய்தோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு விகாரை ஒன்றில் இடம் பெற்ற விஷேட வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

பிளவுபட்டு, சிதறிப் போயிருந்த நாட்டை காப்பாற்றியதோடு, நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி நிலமும் கட்டடங்களும் எமக்கு சொந்தம் இல்லாத நிலை காணப்பட்டது அதனை மீட்டுக் கொடுத்தவர்கள் இராணுவத்தினரே.

30 வருடங்களுக்கு மேலாக மூன்று இன மக்களும் மரணித்தது மற்றுமில்லாமல் அச்சத்தின் மத்தியில் வாழ வேண்டிய நிலையை மாற்றியமைத்து சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது இராணுவமே.

இவ்வாறாக தியாகம் செய்த இராணுவத்தினரை இன்று அவமானப்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது. ஆனால் மக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். செய்நன்றியை மக்கள் மறக்கமாட்டார்கள்.

யுத்தம் நடந்தது தமிழ் மக்களுக்கு எதிராகவோ ஓர் இனத்திற்கு எதிராகவோ அல்ல என்பதே உண்மை. பல மக்களை கொன்று அழித்து விகாரைகளுக்கு மட்டுமல்லாது, முஸ்லிம் பள்ளி வாசல்களுக்கு உள்ளேயும் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி பாரிய அளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய தீவிரவாதிகளிடம் இருந்தே நாம் நாட்டை காப்பாற்றி எடுத்தோம் எனவும் மகிந்த தெரிவித்தார்.

இதேவேளை குறித்த வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

30 வருட யுத்தத்தை வென்று எடுக்க நாட்டின் புலனாய்வுத் துறை பாரிய சேவையினை செய்தனர். அமைதியான அவர்களுடைய சேவை காரணமாகவே இலங்கையின் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் புலிகளை வெல்ல முடிந்தது.

தெற்கில் வாழும் நாம் புலனாய்வுப் பிரிவிற்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் திறமை காரணமாகவே கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் ஊடுருவி இருந்த புலிகளை அழிக்க முடிந்தது.

அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் வெற்றி என்பது சாத்தியம் இல்லை. அந்த நன்றியை நாம் மறந்து விடக்கூடாது. செய்நன்றி அறிந்த மக்கள் எவருமே அதனை மறக்கமாட்டார்கள்.

அவ்வாறான சிறப்பு மிக்க புலனாய்வுத் துறையினரை மதிக்க வேண்டும், எதனையும் மறந்துவிடலாகாது எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

Comments