கேப்பாப்புலவு மக்களுக்காக யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய தென்னிலங்கை மக்கள்! மிரட்டும் புலனாய்வாளர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
929Shares

கேப்பாப்புல மக்களின் நில மீட்புப் போராட்டத்தில் தென்னிலங்கை மக்களும் இணைந்துள்ளனர்.

கேப்பாப்புலவு - பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த நான்கு வாரங்களாக கேப்பாப்புலவு மற்றும் பிலக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தினை மீள வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு இதுவரை எந்தவிதமான தீர்வினையும் அரசாங்கம் வழங்காத நிலையில் தொடர்ந்தும் அவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அவர்களின் நிலமீட்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக, பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் உடன் இணைந்துள்ளனர்.

இதேவேளை, கேப்பாப்புலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பொதுமக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டும் இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் மாத்திரமன்றி, சிங்கள மக்களும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தென்னிலங்கை மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இன்று தாம் முன்னெடுத்த போராட்டத்திற்கு புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் இருந்ததாகவும், அதற்கு மத்தியிலும் தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்திற்கு நடுவெ 30இற்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் எங்களை படம் பிடித்து மிரட்டினர்.

நேற்றைய தினம் சிலரது வீடுகளுக்கு சென்று போராட்டத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தனர் என குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள்,

இது குறித்து மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரராஜாவிடமும் முறையிட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments