கோத்தபாய ராஜபக்சவினாலும் கட்டுப்படுத்த முடியாத முன்னாள் முப்படைகளின் தளபதி ஒருவரே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், படுகொலை, கடத்தல் மேற்கொண்டார் என டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியினரின் ஊடகவியலாளர் மாநாடு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
ஒருதொகை தங்கம் மாயமானமை குறித்து இன்று கோத்தபாய ராஜபக்ச மீது விசாரணை செய்யப்படுகிறது. அப்படியல்ல, தனிப்பட்ட கோபத்தைவிடுத்து அதிகாரத்தில் இருப்பவர்களால் அடிமுடியை தேடிக்கண்டறிய முடியும்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நோயார் மீதான தாக்குதல் தொடர்பில் அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரையை கொஞ்சம் பரிசீலித்துப் பார்க்குமாறு கோருகின்றேன்.
அப்போது அவர்கள் யார் மீது விரல் நீட்டினார்கள்? அப்போது இராணுவத்தில் இருந்தவரும், இன்று நாடாளுமன்றத்தில் இருக்கிற ஒருவர் மீதே அன்று விரல் நீட்டப்பட்டது. பாதுகாப்புச் செயலாளரினாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆயுதக் கும்பலொன்று முப்படைத் தளபதியிடம் இருப்பதாகக் கூறினார்கள் என்று குறிப்பிட்ட அவர்,
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், படுகொலை, கடத்தல் போன்ற விடயங்களை முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்ற ஒருவராலேயே முன்னெடுக்கப்பட்டது.
“சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பதிவு செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதிருக்கிறது.
ஆனால், நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, ஊடகவியலாளர் கீத் நோயார் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியரங்கப்பட வேண்டும்.
அதன் பின்னால் யார் செயற்பட்டுள்ளதென்ற விடயமும் வெளியிடப்பட வேண்டும். கடந்தகால ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல், படுகொலை போன்ற விவகாரங்களில் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளதாகக் கூறும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன் என்றார்.