ஜெனிவா அமர்வு இலங்கையில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்துமா?

Report Print Samy in அரசியல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது அமர்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது.

இந்த அமர்வின் ஆரம்பம் இலங்கை தொடர்பில் அதிக முக்கியத்துவம் மிக்கதாக அமையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அது எந்தளவுக்கென்றால் 2015ம் ஆண்டுக்கு முன்னர் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்பட்டதோ அதனையொத்த பார்வையே இந்த அமர்வின் ஆரம்பம் தொடர்பில் நிலவியது.

இது தொடர்பில் சில உள்நாட்டு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் அளித்தன. இந்த அமர்வில் இலங்கை கடுமையான தடைகளைத் தாண்ட நேரிடும் என்றே பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால் அதற்கான பிரதிபலிப்புகளை இந்த அமர்வின் தொடக்கத்தில் காண முடியவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் ராத் ஹுஸைன் இந்த அமர்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது இலங்கை தொடர்பில் அவர் எதுவுமே குறிப்பிடவில்லை.

ஆனால் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அண்மையில் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பொன்றில், சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மாநாட்டுக்கு புறம்பாக ஆணையாளர் ஹுஸைன் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அச்சமயம் இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பான நகர்வுகள் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் அது தொடர்பில் இந்த அமர்வில் சுட்டிக்காட்டப்படும் என்றும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்திக் குறிப்பும், இந்நாட்டின் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க நகர்வுகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களும்தான் இந்த அமர்வு இலங்கைக்கு கடுமையாக அமையும் என்ற பார்வையை ஏற்படுத்தியது.

ஆனால் அமர்வின் தொடக்கமும் ஆணையாளரின் தொடக்க உரையும் அப்பார்வையை செல்லாக் காசாக்கியது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அக்கறை செலுத்தும் தரப்பினருக்கு இந்த அமர்வின் தொடக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்றாலும் மார்ச் மாதம் 24ம் திகதி வரையும் நடைபெறவிருக்கும் இந்த அமர்வின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கை விவகாரம் மூன்று- தினங்கள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன்படி இலங்கைக்கு கள விஜயம் மேற்கொண்ட சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா. விஷேட அறிக்கையாளரின் அறிக்கை நாளை 02ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பில் இலங்கைக்கு கள விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா. அறிக்கையாளரின் அறிக்கை மார்ச் 15ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேநேரம் மார்ச் 22ம் திகதி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மற்றும் மனித உரிமைகள் ஊக்குவிப்பு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த மூன்று தினங்களும் இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக இருந்தாலும் கூட அவை 2015 க்கு முற்பட்ட அமர்வுகள் போன்று அமையாது என்பது மிகத் தெளிவானது.

அதேநேரம் மனித உரிமைகள் பேரவையின் 34 வது அமர்வின் தொடக்க அமர்வை இலங்கை வெற்றிகரமாகக் கடந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

அதே போன்று ஏனைய அமர்வுகளையும் இலங்கை கடக்கும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடையேயும் அரசியல் அவதானிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

அதாவது நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வேலைத் திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு அரசாங்கம் முன்னெடுக்கும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மக்கள் நம்பிக்கையோடு நோக்கும் நிலைமையும் உருவாகியுள்ளது.

அதாவது 2015ம் ஆண்டுக்கு முன்னர் நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பில் நாட்டில் காணப்பட்ட நிலைமையையும், தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு நோக்கம் போது பாரிய முன்னேற்றத்தை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அதனால் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் சகவாழ்வு மற்றும் நல்லிண்ணக்க செயற்பாடுகள் தொடர வேண்டும். நாட்டில் நிலைபேறான அமைதி சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இருந்த போதிலும் பல தசாப்தங்கள் நீடித்த சந்தேகங்களையும் ஐயங்களையும் ஒரு சில தினங்களுக்குள் களைந்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பி விட முடியாது. அது சாத்தியமற்ற ஒன்று.

இதற்கு சிறிது காலம் எடுக்கும். இது எல்லா மட்டங்களிலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயமாகும்.

ஆகவே இந்நாட்டில் நிலைபேறான அமைதி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 வது அமர்வு உந்துசக்தியாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைய வேண்டும்.

அதுவே மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

Comments