பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஐ.நாவில் அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று இது குறித்து இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல ஜெனீவாவில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கட்டடத் தொகுதியில் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலளார்களை சந்தித்த போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவர்களுக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1978ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், 1982ம் ஆண்டு அந்த சட்டம் ஸ்திரமான சட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை 18 மாதங்கள் தடுத்து வைத்திருக்க முடியும்.

இதேவேளை, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விரைவில் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 130 புலி செயற்பாட்டாளர்களும், 10 சிங்கள சந்தேகநபர்களும், 8 புலனாய்வு உத்தியோகத்தர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments