ஆசிரியர், அதிபர்களுக்கான வெற்றிடங்களை வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்க அவசர நடவடிக்கை

Report Print Nesan Nesan in அரசியல்
88Shares

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை நியமிப்பது தொடர்பிலான திட்டம் ஒன்று உருவாருக்கப்படவுள்ளது.

இதன் உத்தேசதிட்டம் குறித்து ஆராய்வதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அவரது ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தலைமையில் எதிர்வரும் 14ஆம் திகதி திறைச்சேரியில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கடந்த 28ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார்.

இதன்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பொருட்டு கிழக்கு மாகாண அரச சேவையில் நிலவி வருகின்ற வெற்றிடங்களை நிரப்பலாம் என தெரிவித்து, அதற்கான ஆலோசனைகளை முன்மொழிந்திருந்தார்.

மேலும் கிழக்கில் உள்ள பாடசாலைகளில் 4703 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் ஒருவார காலத்திற்குள் சாதகமான முடிவை அறிவிப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார்.

இதன் பிரகாரமே தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடலை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் பணித்திருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண கல்வியமைச்சர், மத்திய கல்வி அமைச்சின் செயலாளர், திறைசேரியின் பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Comments