தமிழக இளைஞன் சுட்டுக்கொலை! கடற்படையினர் மீது தவறு இருந்தால் தண்டனை நிச்சயம்

Report Print Siddharth in அரசியல்
85Shares

தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை இலங்கை கடற்படை மறுத்து வருகின்றது. இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படை மீது தவறு இருக்குமானால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இரண்டு நாட்களாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் அதிகம் பேசப்படும் விடயம் தமிழக மீனவர் படுகொலையே ஆகும். இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளமலேயே மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறுவது இரண்டு நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக மாறி விட்டது.

இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். எனினும் இப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை என கடற்படை கூறுகிறது.

இச்சம்பவத்தில் பரிதாபமாக 22 வயதுடைய இளைஞனது உயிர் பலியாகியுள்ளது.

எனவே தான் இவ்விடயம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். இலங்கை கடற்படை மீது தவறு இருக்குமானால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள மீனவர் தொடர்பான கலந்துரையாடலின் போது சிறந்ததொரு தீர்வினை எடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

இந்நிலையில் கச்சதீவு திருவிழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள 1500 தமிழக மீனவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

ஆனால் எந்த வகையிலும் இவ்விடயம் கச்சதீவு திருவிழாவினை பாதித்து விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments