இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்: சீமான் பேட்டி

Report Print K.Rangan in அரசியல்

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையிலேயே சீமான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இராமேஷ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி ஆதம்பலம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இலங்கை வீரர்களுக்கு நம் நாட்டில் இராணுவ பயிற்சி, பண உதவி மற்றும் போர்க் கப்பலையும் மத்திய அரசு பரிசாக வழங்குகிறது.

ஆனால் அவர்களிடமிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் 150 படகுகளையும் ஏன் மத்திய அரசால் திருப்பி வாங்கித்தர இயலவில்லை. நம்மை விட மிகவும் சிறிய நாடான இலங்கைக்கு ஏன் நம்மைப் பார்த்து அச்சம் ஏற்படவில்லை.

தமிழக மீனவர்கள் என்பதாலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறரா. அதே சமயம் வட இந்தியரோ அல்லது கேரள மாநிலத்தவர்களோ சுட்டுக் கொல்லப்பட்டால் இது போன்று தான் மத்திய அரசு செயல்படுமா. கேரள மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக் கொன்ற போது அந்த சம்பவம் பாராளுமன்றத்திலும் எதிரெலித்தது.

தமிழகத்தில் இதுவரை இலங்கை கடற்படையால் 840 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அரசு ஒரு சிறு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. ஆனால், வாரணாசி, கேரள மாநில பட்டாசு விபத்துக்களுக்கு நேரில் சென்று இந்திய பிரதமர் பார்வையிடுகிறார்.

அதே சமயம் தில்லி ராம்லீலா மைதானத்தில் தட்டை ஏந்தி கற்பூர ஆராத்தியும் செய்கிறார். கோவையில் காட்டை அழித்து ஒரு மதத்தினரின் நிகழ்வுகளில் பங்கேற்க தனி விமானத்தில் வந்து செல்கிறார்.

இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தினரின் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா கூறுகையில், மத்திய அரசு மத சார்பற்றது என்று கூறுகிறார். ஆனால் பிரதமர் மட்டும் இவ்வாறு மத சம்மந்தமான நிகழ்வுகளில் பங்கேற்பது எந்தவகையில் ஏற்றுக் கொள்ள முடியும்.

தமிழர்கள் பிரச்சினையில் மட்டும் ஏன் கவனம் செலுத்தவில்லை.இந்தக் கொலை சம்பவம் நெடுவாசல், அத்திக்கடவு-அவிநாசி, சேலம் உருக்கு ஆலை, தாமிரபரணி தண்ணீர் பிரச்னைகளை திசை திருப்பும் முயற்சியா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்று பாஜகவும், காங்கிரசும் ஓரே நிலைப் பாட்டையே கொண்டுள்ளது.

ஆனால் கச்சதீவு தமிழர்களின் பூர்வீக சொத்து என்பதற்கான ஆவணங்கள் உள்ளன.

தற்போது இலங்கை கடற்படை வேதாரண்யம் வரை வந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆகவே, தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய அரசு இலங்கைக்கு செய்து வரும் இராணுவ உதவியை நிறுத்தவும், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

Comments